ஒரு வாரத்தில் விடுபட்ட 16 ஆயிரம் கொரோனா நோயாளிகள்! – அதிர்ச்சித் தகவல்

worst hit Corona, கொரோனா
(Image: AP Photo)

லண்டன், அக்டோபர் 5, 2020: இங்கிலாந்தில் ஒரு வாரத்தில் 16 ஆயிரம் கொரோனா நோயாளிகள் விடுபட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பரிசோதனை முடிவுளை கையாள்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 16 ஆயிரம் கொரோனா நோயாளிகள் பற்றிய விவரம் விடுபட்டுள்ளது.

செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2ம் தேதி வரையிலான வாரத்தில் 15,841 கொரோனா கேஸ்கள் விடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக, அவர்களுக்கு தொற்று ஏற்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டாலும், அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்களை கண்டறியும் பணி மேற்கொள்ளப்படவில்லை.

பொதுவாக கொரோனா உறுதியானால் 48 மணி நேரத்தில் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகும்.

கடந்த வாரத்தில் தினசரி கொரோனாத் தொற்று 7 ஆயிரத்தைத் தொட்டபடி இருந்தது. 16 ஆயிரம் பேர் விடுபட்டிருப்பது தற்போது தெரியவந்திருப்பதன் மூலம் உண்மையில் தோராயமாக தினசரி 10 ஆயிரம் என்ற அளவில் கொரோனா தொற்று இருந்திருக்க வேண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசுகையில், “கிட்டத்தட்ட கொரோனா உறுதியானவர்களில் பாதி பேர்கள் பற்றிய விவரத்தை கணினி பதிவு செய்யவில்லை. இதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய முடியவில்லை.

இந்த தொடர்புடையவர்களை கண்டறிவதுதான் கடந்த சனிக்கிழமை முக்கிய பணியாக இருந்தது. இனி இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மட்டுமின்றி கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 25 ஆயிரம் பேர் தங்கள் தொடர்பு பற்றிய விவரத்தை அளிக்காமல்தான் உள்ளனர்” என்றார்.

இங்கிலாந்தின் சுகாதாரத் துறை நேரடியாக பதிவுகளை செய்வது இல்லை. வேறு ஒரு தனியார் நிறுவனம்தான் இந்த தரவுகளைப் பதிவு செய்து அளிக்கிறது.

அந்த நிறுவனம் வழங்காமல் விட்டதே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் நெருங்கிய தொடர்புகளைக் கண்டறிய முடியாமல் போனதற்கு காரணம் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. பதிலுக்கு தனியார் நிறுவனமும் சுகாதாரத் துறை மீது புகார் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே எதிர்க்கட்சி தரப்பில் அரசு மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அரசு 16 ஆயிரம் பேர் விடுபட்டதாகத் தெரிவிக்கிறது. உண்மையில் அது 50 ஆயிரமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இது பற்றி அரசு விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter