9 லட்சம் அரசுப் பணியாளர்களுக்கு அதிகரிக்கும் ஊதியம்!

UK, London

ருத்துவர்கள், ஆசிரியர்கள், காவலர்கள் என 9 லட்சம் அரசுப் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக 3.1 சதவிகிதம் வரை பணவீக்கத்திற்கு மேலான ஊதிய உயர்வு (அகவிலைப்படி உயர்வு) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் சம்பளம் சற்று உயரும்.

இங்கிலாந்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதாக சான்ஸ்லர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக 3.1 சதவிகித வரை வழங்கப்பட உள்ள இந்த உயர்வு துறை சார்ந்த வரவு செலவுகளில் இருந்து பெறப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவலர்கள், பாதுகாப்பு படை வீரர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதில் ஆசிரியர்களுக்கு அதிகபட்சமாக 3.1 சதவிகிதம் வரை உயர்வு கிடைக்கும். அதற்கு அடுத்தபடியாக மருத்துவர்களுக்கு 2.8 சதவிகிதம் வரை கிடைக்கும். போலீசாருக்கு 2.5 சதவிகிதமும், பாதுகாப்பு படையினர், மூத்த ராணுவ அதிகாரிகள், மூத்த குடிமையியல் பணியாளர்கள், நீதித்துறை பணியாளர்களுக்கு 2 சதவிகிதம் வழங்கப்படும்.

பாதுகாப்பு படையினர், சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவர்களுக்கு இந்த உயர்வு கடந்த ஏப்ரல் தேதியிலிருந்து வழங்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் போலீசாருக்கு செப்டம்பரிலிருந்து வழங்கப்படும். அவர்களுக்கான சம்பள ஆண்டு என்பது செப்டம்பரிலிருந்து தொடங்குவதால் இந்த ஏற்பாடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செவிலியர்களுக்கு இந்த உயர்வு கிடைக்காது. அவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.1 சதவிகிதம் வரையிலான உயர்வுக்கு லேபர் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. பலரும் இது மிகக் குறைவான அளவு என்று விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் இங்கிலாந்து மருத்துவ கழகம் இது ஓரளவுக்கு ஏற்புடையதாக இருக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk