அலெக்சாண்டர் கரீம் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்… பெண், சிறுவன் உள்பட ஏழு பேர் கைது

சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர் அலெக்சாண்டர் கரீம். (Image: Metropolitan Police)

கடந்த ஜூன் மாதம் கருப்பின இளைஞர் அலெக்சாண்டர் கரீம் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பெண், சிறுவன் உள்பட 7 பேரை மெட் போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் மேற்கு லண்டனில் ஷெப்பர்ட் புஷ்ஷில் உள்ள ஒரு கடைக்கு அதிகாலை 12.30 மணி அளவில் அலெக்சாண்டர் கரீம் என்ற கருப்பின இளைஞர் சென்று கொண்டிருந்தார். தன்னுடைய வாகனத்தில் சென்று கொண்டிருந்த அலெக்சாண்டர் கரீம் சுட்டுக் கொல்லப்பட்டார். யார் அவரை கொலை செய்தது என்று தெரியாமல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அடையாளம் தெரியாமல் ஆளை மாற்றிக் கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் கொலை நடந்த இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் வாகனம் ஒன்று எரிந்த நிலையில் நிற்பதை போலீசார் கண்டறிந்தார். கொலை நடந்த நேரத்தில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் வெள்ளை நிற ரேஞ் ரோவர் கார் ஒன்று வேகமாக செல்வதைக் காண முடிந்தது. இதனால் கொலையாளிகள் அந்த காரில் வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர். சில வாரங்களுக்கு முன்பு அந்த காரின் வீடியோ காட்சியை மெட் போலீசார் வெளியிட்டனர்.

காரின் உரிமையாளர் யார் என்று சோதனை நடத்தியதில் இந்த சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவன், 34 வயது பெண் உள்பட மொத்தம் ஏழு பேரை மெட் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலைகாரர்கள் பயன்படுத்திய கார். (Image: Metropolitan Police)

அலெக்சாண்டர் கரீம் தகவல் தொழில் நுட்பம், கம்ப்யூட்டரில் அதிக ஆர்வம் உள்ளவராக இருந்தார். வருகிற செப்டம்பர் மாதம் பல்கலைக் கழகம் ஒன்றில் கணினி அறிவியல் படிக்கத் திட்டமிட்டிருந்தார். அதற்குள்ளாக அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று அவரது குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “இந்த வழக்கு விசித்திரமானதாக இருந்தது. கொலை சம்பவம் நடந்ததாக தகவல் அறிந்த 25 நிமிடத்தில் கார் ஒன்று கண்டறிப்பட்டது. அவர் மீது எந்த குற்றப் பின்னணியும் இல்லை. அவருடைய சகோதரி மெட் போலீசில் பணியாற்றி வருகிறார். அலெக்சாண்டர் அந்த நேரத்தில் தவறாக எதையும் செய்யவில்லை. கன்வீனியன்ஸ் ஸ்டோருக்கு அவர் சென்று கொண்டிருந்தார்.

இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன்பு கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளனர். எந்த ஒரு காரணமும் இன்றி, ஒன்றும் அறியாத நபரை அவர்கள் சுட்டுக் கொன்றுள்ளார்கள். இந்த சம்பவம் பற்றி பொது மக்களுக்கு கூடுதல் விவரங்கள் தெரிந்தால் தயங்காமல் போலீசிடம் தெரிவிக்கலாம்” என்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk