மான்செஸ்டர்: ஹோட்டலின் ஒரே ஒரு வரவேற்பாளர் பணியிடத்துக்கு விண்ணப்பித்த 1000 பேர்!

Manchester

மான்செஸ்டாில் ஒரு ஹோட்டலில் வரவேற்பாளர் பணியிடம் காலியாக உள்ளது என்று தகவல் வெளியானதைத் தொடர்ந்து அந்த வேலைக்கு 1000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு பல தொழில்கள் மிகக் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நிறுவனம் நீடித்து நிற்க பணியாளர்களை நீக்குவது தவறில்லை என்று நிறுவனங்கள் பலரும் ஆட்குறைப்பை அறிவித்து வருகின்றன. வேலையின்மை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மான்செஸ்டரில் உள்ள ஒரு உணவகத்தில் வரவேற்பாளர் வேலை காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சுமார் 30 பேர் விருப்பம் தெரிவிக்கலாம் என்று எதிர்பார்த்த நிலையில், 1000 பேரிடமிருந்து விண்ணப்பம் வரவே ஹோட்டல் நிர்வாகம் அதிர்ந்து போய்விட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த அந்த நிறுவனம், “30 பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 1000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தது வருத்தத்தை அளிக்கிறது. கடந்த திங்கட்கிழமை எங்களின் 20 மாடி உணவகத்தில் வரவேற்பாளர் பணியிடம் காலியாக உள்ளது என்று விளம்பரம் செய்தோம். அடுத்த நாள் அதாவது 24 மணி நேரத்தில் எங்களுக்கு 963 விண்ணப்பங்கள் வந்திருந்தது. அதன் பிறகும் விண்ணப்பங்கள் வந்தன. வழக்கமான இந்த பணியிடத்துக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்தால் 20-30 பேர் மட்டுமே விண்ணப்பிப்பார்கள்.

விண்ணப்பம் செய்திருந்தவர்களின் தகவலை பார்த்தபோது உயர் படிப்பு முடித்த, உயர் பணியிடங்களுக்கு செல்லும் தகுதிகொண்ட நபர்கள் எல்லாம் விண்ணப்பித்திருந்தனர். சில உணவகங்களின் பொது மேலாளர்கள் கூட விண்ணப்பித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது” என்றார்.

கடந்த வாரம் பிட்ஸா எக்ஸ்பிரஸ் மற்றும் வேறு சில உணவு சங்கிலி நிறுவனங்கள் ஆட் குறைப்பை அறிவித்தன. 2000க்கும் மேற்பட்டோரின் வேலை பறிபோனது. இந்த நிலையில் வேலை தேடி அலைவோர் எண்ணிக்கை அதிகரிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk