பிரிஸ்டல் நீர் மறுசுழற்சி சுத்திகரிப்பு நிலையத்தில் வெடி விபத்து – 4 பேர் பலி!

Avonmouth, explosion, dead, வெடி, விபத்து
(Image: Apex News)

இன்று காலை பிரிஸ்டல் நீர் மறுசுழற்சி ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரிஸ்டலின் அவனாமவுத் பகுதியில் உள்ள தொழிற்சாலை பகுதியில் நீர் மறுசுழற்சி ஆலை ஒன்று உள்ளது. அங்கு இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பல கி.மீ தொலைவிலும் கூட வெடி சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து காலை 11.20 மணி அளவில் மீட்புப் படையினரின் உதவி கோரப்பட்டது. மீட்பு படை, ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் ஆலையின் ரசாயன தொட்டியில் வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதில், வெசெக்ஸ் நீர் ஊழியர்கள் மூன்று பேர் மற்றும் ஒரு ஒப்பந்தக்காரர் என நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேறு யாரும் உள்ளே சிக்கியுள்ளார்களா என்றும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இதைப் படிச்சீங்களா: 99 சதவிகித கொரோனா உயிரிழப்பைத் தடுக்கும் தடுப்பூசி – ஜோனதன் வான்டாம் உறுதி

எதனால் வெடி விபத்து ஏற்பட்டது என்று தெரியவில்லை. 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ், ஏராளமான போலீஸ் வாகனங்கள், தீயணைப்பு மீட்புப் பிரிவு வாகனங்கள் சம்பவ இடத்தில் உள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து அரை மைல் தொலைவில் நகர மையம் உள்ளது. அங்கு வரை அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரை மைல் தொலைவில் உள்ள ஒரு அலுவலகத்தில் பணியாற்றி வரும் நபர் கூறுகையில், “திடீரென்று வெடி சத்தம் கேட்டது. எங்கள் ஜன்னல்கள் அனைத்தும் பயங்கரமாக ஆடி சத்தமிட்டன” என்றார்.

நான்கு பேர் உயிரிழப்புக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter