99 சதவிகித கொரோனா உயிரிழப்பைத் தடுக்கும் தடுப்பூசி – ஜோனதன் வான்டாம் தகவல்

Covid, deaths, avoided, கொரோனா, தடுப்பூசி

முதல் கட்ட கொரோனா தடுப்பூசியானது 99 சதவிகிதம் அளவுக்கு கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழலையும் மருத்துவமனை உயிரிழப்புகளையும் தடுக்கும் என்று உதவி தலைமை மருத்துவ அதிகாரி ஜோனதன் வான்டாம் தெரிவித்துள்ளார்.

ஃபைசர் பயோஎன்டெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து முறைப்படி அனுமதி அளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் இங்கிலாந்துக்கு வழங்கப்படும் என்று ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.

முதியவர்கள், மருத்துவப் பணியாளர்கள் என கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்து அரசின் துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜோனதன் வான்டாம் பிபிசி-க்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, “முதல் முன்னுரிமை யாருக்கு என்ற பட்டியல் அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். முடிந்தவரை விரைவாகவும் அதிக அளவிலும் தடுப்பூசி போடப்படும்.

இதன் மூலம் 99 சதவிகிதம் அளவுக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு தீவிரம் அடைந்து மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் குறையும்.

கொரோனா தடுப்பூசியை ஒவ்வொருவர் வீட்டுக்கும் சென்று வழங்குவதில் சில தொழில்நுட்ப பிரச்னை உள்ளது. இந்த தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி செல்ஷியசில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.

அப்படிப்பட்ட சூழலில் வீடுகளுக்குச் செல்வதற்கு பதில் குறிப்பிட்ட இடத்தில், மைனஸ் 70 டிகிரி தட்பவெப்பநிலை பராமரிக்கும் குளிர்சாதனப் பெட்டி உள்ள மருத்துவமனைகளில் தடுப்பூசி வைக்கப்பட்டு மக்களுக்கு போடப்படும்” என்றார்.

முன்னதாக டவுனிங் ஸ்ட்ரீட் பேட்டியின் போது, “தடுப்பூசி விவகாரத்தில் பொது மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம்.

சமூக இடைவெளி, கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றுக்கு முடிவுகட்ட வேண்டும் என்றால் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அணுகும் போது மறுப்பு ஏதும் இன்றி மக்கள் போட்டுக் கொள்ள வேண்டும்.

கொரோனா தடுப்பூசியைக் கர்ப்பிணிகள் தவிர்த்து மற்ற அனைவரும் தயக்கம் இன்றி போட்டுக்கொள்ள வேண்டும்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி இங்கிலாந்தில் பயன்படுத்துவதற்கான அனுமதி கிறிஸ்துமசுக்குள்ளாக வழங்கப்படும்.

தடுப்பூசி போட்டுக்கொள்வதால் உடனடியாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிட முடியாது என்பதையும் மக்கள் மனதில் கொள்ள வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter