ஃபைசர் பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று அறிவித்த இங்கிலாந்து!

கொரோனா, தடுப்பூசி, coronavirus vaccine, prevent, Stop anti vaccination, vaccine judged safe
கொரோனா தடுப்பூசி மாதிரி புகைப்படம்!

ஃபைசர் பயோஎன்டெக் தயாரித்த கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று இங்கிலாந்து அனுமதி வழங்கியுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி டிசம்பர் முதல், இரண்டாவது வாரத்தில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று பல வாரங்களாக கூறப்பட்டு வந்தது தற்போது உறுதியாகி உள்ளது.

ஃபைசர் – பயோஎன்டெக் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி இங்கிலாந்தில் பயன்படுத்த பாதுகாப்பானது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலகிலேயே கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்த முதல் நாடு என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது. வெகு விரைவில் இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடுதல் நடைமுறைக்கு வர உள்ளது.

ஃபைசர் – பயோஎன்டெக் நிறுவனத்திடமிருந்து நான்கு கோடி தடுப்பூசிகளை இங்கிலாந்து வாங்க உள்ளது. இதன் மூலம் இரண்டு கோடி பேருக்கு தடுப்பூசி போட முடியும்.

முதல் கட்டமாக இதில் 80 லட்சம் தடுப்பூசி வருகிற நாட்களில் விநியோகிக்கப்படும் என்று ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒருவருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்படும் என்பதால், 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடியும். தடுப்பூசி வழங்கலை கண்காணிக்க அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதியவர்கள், முதியவர்களுக்கான நல மையங்களில் பணியாற்றுபவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி வழங்கப்படும் என்கிறது.

ஃபைசர் – பயோஎன்டெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிகளை பத்திரமாக வைக்க மருத்துவமனைகளில் மைனஸ் 70 டிகிரி செல்ஷியஸ் குளிர்பதன பெட்டி தேவை. இந்த வசதிகொண்ட மருத்துவமனைகளுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி அனுப்பி வைக்கப்படும்.

பொதுவாக ஒரு நோய்க்கிருமிக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்க 10 ஆண்டுகளாவது ஆகும். ஆனால், பத்தே மாதத்தில் கொரோனா தடுப்பூசியை கண்டறிந்து மக்கள் பயன்பாட்டுக்கு ஃபைசர் – பயோஎன்டெக் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் கூறுகையில்,  “ஃபைசர் நிறுவனத்தின் பெல்ஜியம் உற்பத்திக் கூடத்திலிருந்து இங்கிலாந்துக்கு தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும்.

முதல் பெட்டகம் அடுத்த வாரத்தில் வந்துவிடும். அதைத் தொடர்ந்து பல லட்சம் டோஸ்கள் இந்த மாதத்திலேயே வந்துவிடும்.

2020ம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக இருந்தது. தடுப்பூசி வந்துள்ளதன் மூலம் 2021 மிகவும் சிறப்பானதாக இருக்கும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter