வழக்கத்துக்கு மாறாக ஞாயிற்றுக்கிழமை அமைச்சர்களுடன் ஆலோசனை செய்த போரிஸ்!

boris johnson
பிரதமர் போரிஸ் ஜான்சன். (கோப்புப் படம்)

லண்டன், அக்டோபர் 11, 2020: வழக்கத்துக்கு மாறாக ஞாயிற்றுக்கிழமை பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னுடைய அமைச்சரவை சகாக்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனாத் தொற்று வேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. புதிய கட்டுப்பாடுகள் பற்றிய அறிவிப்பைப் பிரதமர் நாளை வெளியிட உள்ளார்.

நாடாளுமன்றத்தில் நாடு முழுவதற்குமான மூன்று விதமான கட்டுப்பாடுகளை பிரதமர் அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தன்னுடைய அமைச்சரவை சகாக்களுடன் போரிஸ் ஜான்சன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

வழக்கமாக அவர் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலோசனை நடத்துவது இல்லை. தற்போது தொற்று அதிகரித்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவசர அவசரமாக தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடந்துள்ளது.

ஏற்கனவே வடக்கு பகுதியில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார பாதிப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்கள், மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நாளை கொண்டுவரப்பட உள்ள கட்டுப்பாட்டு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கவலை அளிக்கும் நிலையில் அமைச்சர்களுடன் போரிஸ் ஜான்சன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் அரசு கொண்டுவர உள்ள கட்டுப்பாடுகளுக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மான்செஸ்டர் சிட்டி கவுன்சில் தலைவர் சர் ரிச்சர்ட் லீஸி அரசின் அறிவிப்பில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது என்று விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “வெஸ்ட்மின்ஸ்டர் குமிழ்களை தாண்டிச் சென்று பேசுவது சாத்தியமற்றதாக மாறிவிட்டது. கிரேட்டர் மான்செஸ்டர் மட்டுமின்றி வடக்குப் பகுதி முழுக்க கொண்டு வரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஏன் தேவை என்பதற்கு உறுதியான ஆதாரத்தை அரசு வழங்கவில்லை. அரசு தவறான இடத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று தெரிகிறது” என்றார்.

கிரேட்டர் மான்செஸ்டர், லிவர்பூல் உள்ளிட்ட பல பகுதி மேயர்களும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வடக்குப் பகுதி கவுன்சில் தலைவர்கள் அனைவரும் போரிஸ் ஜான்சன் கொண்டு வரும் கட்டுப்பாடுகள் வடக்குப் பகுதியின் பொருளாதாரத்தைச் சிதைத்துவிடும் என்று எச்சரக்கைவிடுத்துள்ளனர். இந்த நிலையில் போரிஸ் ஜான்சன் ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter