ஐரோப்பாவில் இரண்டாம் கட்ட கொரோனா அறிகுறிகள் தெரிகிறது! – பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

(Image: twitter.com/BorisJohnson)

இரண்டாம் கட்ட கொரோனா பரவலுக்கான அறிகுறிகள் தென்படுவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினில் இருந்து வருபவர்களுக்கு மீண்டும் 14 நாள் சுய தனிமைப்படுத்தல் விதியை கொண்டுவந்ததன் மூலம் இங்கிலாந்து அரசு மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. இங்கிலாந்தை விட மெடிட்டேரியன் நாடுகளில் கொரோனா வைரஸ் விகிதம் குறைவாகவே உள்ளது என்று மேட்ரிட் பிரதம அமைச்சர் கூறியிருந்தார். இந்த நிலையில் தன்னுடைய நிலை பற்றி இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நாட்டிங்ஹாம்ஷையருக்கு வந்த போரிஸ் ஜான்சன் கூறுகையில், “ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் கட்ட கொரோனா பரவலுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எனவே நாம் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா குமிழ் தென்படத் தொடங்கியுள்ளது என்றே நாங்கள் கருதுகிறோம்.

ஐரோப்பாவில் நம்முடைய சில நண்பர்களுக்கு என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. கொரோனா இரண்டாம் கட்ட தொற்று அறிகுறிகள் தென்படுவதை காணும் போது பயம் வருகிறது. அதனால் இங்கிலாந்தில் கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது” என்றார்.

ஸ்பெயினில் இருந்து வருபவர்களுக்கு 14 நாள் சுய தனிமைப்படுத்தல் பற்றி கேட்ட போது, “நாங்கள் எப்போதுமே சுய தனிமைப்படுத்தலின் தாக்கத்தை குறைப்பதற்கான வழிகளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தற்போதைய நிலையில் நாங்கள் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை கட்டாயம் உறுதியுடன் பின்பற்ற வேண்டும். தற்போது ஸ்பெயின் தொடர்பான வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறோம். இன்னும் உலகம் முழுக்க உள்ள பகுதிகளுக்கானதை வழங்குவோம்.

ஸ்பெயினில் சில பகுதிகளில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றுவிட்டு இங்கிலாந்து திரும்பிய பயணிகளில் 10 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதைத் தொடர்ந்தே ஸ்பெயினில் இருந்து வருபவர்களுக்கு 14 நாள் சுய தனிமைப்படுத்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk