ஏழு ஊழியர்களுக்கு கொரோனா… உணவகத்தை மூடிய அக்பர் ரெஸ்டாரண்ட்

(Image: Google Map Street)

வெஸ்ட் யார்க்ஸ், 31 ஆகஸ்ட் 2020: பிராட்ஃபோர்டில் இயங்கி வரும் அக்பர் உணவகத்தில் பணியாற்றி வரும் ஏழு பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வெஸ்ட் யார்க்ஸ்-ல் பிராட்ஃபோர்டில் உள்ள அக்பர் ‘கிங் ஆஃப் கறி’ ரெஸ்டாரண்டில் பணியாற்றி வந்தவர்களுக்கு கடந்த 20ம் தேதி கொரோனா உறுதியானது.

இதைத் தொடர்ந்து அந்த ரெஸ்டாரண்டில் பணியாற்றிய அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அடுத்த ஐந்து நாட்களுக்கு ரெஸ்டாரண்டை மூடுவதாக அக்பர் ரெஸ்டாரண்ட் அறிவித்துள்ளது. மற்ற ஊழியர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தலில் இருக்கும்படி அந்த ரெஸ்டாரண்ட் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து அக்பர் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் ஷபீர் உசேன் கூறுகையில், “இங்கு வேலை செய்து வந்த பலரையும் வீட்டிலேயே தங்கி சுய தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அனுப்பியுள்ளோம்.

மற்ற ஊழியர்களை வைத்து கடையை நடத்த முியும். இருப்பினும் ஊழியர்கள் மற்றும் இங்கு வரும் வாடிக்கையாளர்களின் நலனை 100 சதவிகிதம் உறுதி செய்யும் வகையில் சில நாட்களுக்கு ரெஸ்டாரண்டை மூடுவது என்று முடிவு செய்துள்ளோம்.

ஈட் அவுட் ஹெல்ப் அவுட் திட்டம் காரணமாக எங்களுடைய ஊழியர்கள் அனைவரும் அதிக வேலைப்பளுவுடன் இருந்தனர். அவர்களுக்கு இது ஒரு விடுமுறைக் காலமாக அமைந்துள்ளது.

எங்கள் உணவகத்தில் முன்பதிவு செய்திருந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எங்களது மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறோம்.

வாடிக்கையாளர்கள் நிச்சயம் எங்கள் நிலைமையை உணர்ந்து கோவிட்19 கட்டுக்குள் வர, கொரோனா பரவல் இந்த மாவட்டத்தில் ஏற்படுவதைத் தடுக்க ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.

பிராட்ஃபோர்ட் பொது சுகாதாரத் துறை இயக்குநர் சாரா மக்கிள் இது குறித்து கூறுகையில், “வாடிக்கையாளர்களுக்கு தொற்று ஆபத்து இருப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.

ஏனெனில் அந்த ரெஸ்டாரண்டில் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வந்துள்ளன. ஊழியர்கள், மற்றவர்களின் நலனைக் காக்கும் முயற்சியாக உணவகத்தை மூடுவதாக உசேன் எடுத்த முடிவு பாராட்டுக்குரியது” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter