போதை பொருள் வைத்திருந்ததாக துபாய் சிறையில் வாடும் 23 வயது பிரிட்டிஷ் விமானப் பணிப்பெண்!

துபாய் சிறையில் வாடும் டெரின்!

போதைப் பொருள் வைத்திருந்ததாக துபாயில் பணியாற்றி வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். உடல் பரிசோதனையில் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்று தெரிந்த பிறகும் அவரை விடுதலை செய்யாமல் துபாய் போலீசார் அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் போதைப் பொருள் வைத்திருந்தால் மிகக் கடும் தண்டனை வழங்கப்படும். இந்த நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் போதைப் பொருள் வைத்திருந்ததாக துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். துபாய் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் சிப்பந்தியாக பணியாற்றி வந்த டெரின் கிரவ்ஃபோர்டு என்ற பெண் தன்னுடைய பாய் ஃபிரெண்டுடன் முதன் முறையாக டேட்டிங் சென்று திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெரின் லிவர்பூலைச் சேர்ந்தவர். ஜூன் 21ம் தேதியில் இருந்து அவர் துபாயின் மிக மோசமான அல் பர்ஷா சிறையில் உள்ளார். தனக்கும் போதைப் பொருளுக்கும் தொடர்பில்லை என்று டெரின் விளக்கம் அளித்துள்ள நிலையில், அவருக்கு பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். பரிசோதனை முடிவில் டெரின் போதைப் பொருட்களை பயன்படுத்தவில்லை என்று தெரியவந்தால் அவரை விடுதலை செய்வதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து டெரினுக்கு ரத்த பரிசோதனை செய்துள்ளார்கள். கடந்த வியாழக் கிழமை பரிசோதனை முடிவு வந்துள்ளது. அதில், டெரின் போதைப் பொருள் பயன்படுத்துபவர் இல்லை, அவர் உடல் மண்டலத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கான அடையாளம் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆனாலும், அவரை விடுதலை செய்யாமல் தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்துள்ளதாக டெரினின் சகோதரி குற்றம்சாட்டியுள்ளார்.

10 வயதில் தாயைப் பறிகொடுத்துவிட்டு, உறவினர் வீட்டில் தங்கி வளர்ந்தவர் டெரின். அவருக்கு புகைப்பிடித்தல், மது அருந்துதல் என்று எந்த ஒரு பழக்கமும் இல்லை. அவளுக்கு எமிரேட்ஸ் நிறுவனத்தில் நல்ல வேலையும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து 2018ம் ஆண்டுதான் துபாய்க்கு அவள் பணி நிமித்தமாக குடிபெயர்ந்தாள். ஜூன் 21ம் தேதி அவள் கைது செய்யப்பட்டாள். கைது செய்யப்பட்ட உடன் அவளுடைய போனை போலீசார் வாங்கி வைத்துள்ளனர். அதன் பிறகு சிறைக்கு செல்லும்போதுதான் அவளால் எங்களைத் தொடர்பு கொள்ள முடிந்தது. ஜூன்  25ம் தேதி தான் அவளைப் பற்றிய தகவல் எங்களுக்குத் தெரிய வந்தது என்று கூறுகிறார் டெரினின் சகோதரி.

அவளுக்கு துபாயில் பணியாற்றி வரும் பிரிட்டிஷ் நாட்டு மார்க்கெடிங் எக்சியூட்டிவ் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அவரைப் பற்றி முழுவதும் தெரியாத நிலையில் அவருடன் டேட்டிங் செல்ல உள்ளதாக குடும்பத்தினருடன் கூறிவிட்டு தான் சென்றிருக்கிறார். அப்போதுதான் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக துபாயில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தைத் தொடர்பு உதவக் கேட்டுள்ளோம். அவர்கள் பிரச்னையை உணர்ந்துள்ளார்கள். ஆனால் இதுவரை டெரினை சென்று சந்தித்து விசாரிக்கவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால் இதை தூதரக அதிகாரிகள் மறுத்துள்ளனர். துபாயில் ஊரடங்கு விதிமுறைகள் கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளதால் சென்று சந்திக்க முடியவில்லை. தளர்வு வழங்கப்பட்டதும் சென்று சந்திப்போம். துபாய் அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பான தகவலைக் கேட்டுள்ளோம். அவருக்கு உள்ளூரில் வழக்கறிஞரையும் ஏற்பாடு செய்து தந்துள்ளோம் என்றனர்.