ஊழியர்களை கொடுமைபடுத்திய ப்ரீத்தி படேல்… பிரதமர் ஆதரவால் பதவி தப்பியது

Priti Patel, quits, ப்ரீத்தி, ப்ரீத்தி படேல், Bullying, inquiry, கொரோனா

ஊழியர்களை கொடுமைபடுத்தியது தொடர்பாக உள்துறை அமைச்சர் ப்ரீத்தி படேல் மீதான குற்றச்சாட்டு உறுதியான நிலையில் போரிஸ் ஜான்சன் அவருக்கு ஆதரவை தெரிவித்ததால் விசாரணை குழு தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.

போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் மிக முக்கியமான உள்துறை பொறுப்பைக் கவனித்து வருபவர் ப்ரீத்தி படேல். இவர் தன்னுடைய ஊழியர்களை கொடுமைப்படுத்துவதாகவும், அமைச்சருக்குரிய நன்னடத்தையை மீறிவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி பிலிப் ருத்னம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யவே வேறு வழியின்றி ப்ரீத்தி படேல் மீதான குற்றச்சாட்டை விசாரணை செய்ய கடந்த மார்ச் மாதம் தரநிலைத் தலைவர் சர் அலெக்ஸ் ஆலன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை ப்ரீத்தி படேல் தொடர்ந்து மறுத்து வந்தார். இந்த நிலையில், விசாரணையில் ப்ரீத்தி படேல் அமைச்சருக்குரிய மாண்புகளை மீறிவிட்டார் என்பது உறுதியானதாக செய்திகள் வெளியாகின.

இது அமைச்சரவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ப்ரீத்தி படேல் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அமைச்சர்கள் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்வது வழக்கமாக உள்ளது.

ஆனால் ப்ரீத்தி படேலுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மெட் ஹென்காக் தொடங்கி பிரதமர் வரை அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு அறிக்கையை ஏற்க பிரதமர் போரிஸ் ஜான்சன் மறுத்துவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரதமரின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், “இந்த விவகாரத்தை பிரதமர் மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டார்.

இதைப் படிச்சீங்களா: இங்கிலாந்துக்கு கடத்தி வரப்பட்ட ஸ்வாமி சிலைகள் தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டது!

இருப்பினும் ப்ரீத்தி படேல் இப்படி செய்வார் என்பதை அவர் நம்பவில்லை. மேலும் இந்த விவகாரத்தில் ப்ரீத்தி படேல் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார்” என்றார்.

விசாரணை அறிக்கையை ஏற்க மறுத்து பிரதமர் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து சர் அலெக்ஸ் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியான தொழிற்கட்சி கையில் எழுத்துள்ளது.

அக்கட்சியின் உள்துறைக்கான செய்தித் தொடர்பாளர் நிக் தாமஸ் – சைமண்டஸ் கூறுகையில், “ப்ரீத்தி படேல் மீதான முழு அறிக்கையையும் அரசு வெளியிட வேண்டும்.

மேலும் பிரதமர் போரிஸ் ஜான்சன், அமைச்சர் ப்ரீத்தி படேலின் பொது வாழ்வில் தரநிலைகள் குறித்து சுய அதிகாரம் கொண்டு குழுவால் விரிவான விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter