யு.கே-வில் கொரோனா 2வது அலை… மீண்டும் லாக்டவுன் வருமா?

ஊரடங்கு காலத்தில் லண்டன் வீதி (Image: Tolga Akmen)

இங்கிலாந்தில் கொரோனா 2வது அலை தென்படத் தொடங்கியுள்ளதாக நிபுணர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். இதனால், மீண்டும் லாக்டவுன் வருமா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

இங்கிலாந்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்று ஆஃபீஸ் பார் நேஷனல் ஸ்டாட்டஸ்டிக்ஸ் (ஓ.என்.எஸ் ) புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு வரும் வாய்ப்புள்ளதா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

இங்கிலாந்தில் கொரோனா கட்டுக்குள் வரவே ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டன. பப், ரெஸ்டாரண்ட், சலூன், ஜிம் உள்ளிட்டவை ஒன்றன் பின் ஒன்றாக திறக்க அனுமதிக்கப்பட்டன. ஆனால் அதன்பிறகு கொரோனா பரவல் அதிகரிக்க ஆரம்பித்திருப்பது தெரியவந்துள்ளது.

மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்வதைக் காட்டிலும் வீடுகளுக்குச் சென்று மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில் நோய்த் தொற்று உறுதி செய்யப்படுவது அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தினசரி கொரோனா நோய்த் தொற்று 2800ல் இருந்து 4200 வரை அதிகரித்துள்ளதாக ஓ.என்.எஸ் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இருப்பினும் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் எத்தனை பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்ற தகவல் ஓ.என்.எஸ் இடம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில், அதாவது ஜூலை 20 முதல் 26 வரையில் அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாசிடிவ் கேஸ்களின் எண்ணிக்கை தினமும் 339 முதல் 721 ஆக இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பரவலைப் பார்க்கும்போது இங்கிலாந்தில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் தொடங்கிவிட்டது போன்று தெரிகிறது என்று நிபுணர்கள் எச்சரக்கைவிடுத்துள்ளனர். கொரொனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக இங்கிலாந்தில் இரண்டாவது ஊரடங்கு வருமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

முழு ஊரடங்குக்குக்கு இப்போது வாய்ப்பில்லை என்றாலும் அரசு வழங்கத் திட்டமிட்ட சில தளர்வுகள் தள்ளிப் போகவும், ஏற்கனவே வழங்கப்பட்ட தளர்வுகளுக்கு தடை விதிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பிரதமர் போரிஸ் ஜான்சன் எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk