ஊரடங்கு இல்லாவிட்டால் மிகப்பெரிய உயிரிழப்பை கொரோனா ஏற்படுத்தும்! – அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை

Covid-19, deaths, lockdown, கொரோனா
(Image: PACEMAKER)

வடக்கு அயர்லாந்தில் முழு ஊரடங்கு கொண்டுவரப்படாவிட்டால் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைக்கு வருபவர்கள் எண்ணிக்கை, உயிரிழப்பு மிகப் பெரிய அளவில் இருக்கும் என்று அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

வடக்கு அயர்லாந்தில் ஆறு வார முழு ஊரடங்கு கொண்டுவர சுகாதாரத் துறை பரிந்துரை செய்து உள்ளது என்றும் அரசு அதை ஏற்பது என்று முடிவு செய்துள்ளது என்றும் செய்தி வெளியானது. இந்த நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வௌியிடப்பட்டுள்ளது.

கிறிஸ்துமசுக்கு அடுத்த நாள் அதாவது டிசம்பர் 26ம் தேதி தொடங்கி ஆறு வாரங்களுக்கு வடக்கு அயர்லாந்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

26ம் தேதி முதல் அத்தியாவசிய தேவை பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் தவிர்த்து மற்ற அனைத்தும் மூடப்படும்.

இது குறித்து வடக்கு அயர்லாந்தின் தலைமை அறிவியல் ஆலோசகர் ஐயன் யங் பி.பி.சி-க்கு அளித்துள்ள பேட்டியில், “தற்போது கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தாமல் அதன் போக்கில் விட்டால் மிகப்பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியாது.

ஜனவரி மாதத்தில் சுகாதாரத் துறை பணியாளர்கள் மிகப்பெரிய அளவிலான பணிச் சுமையை எதிர்கொள்வார்கள் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இதை எதிர்கொள்ள அவர்கள் தயாராகி வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், ஒவ்வொருவரையும் அவர்கள் விருப்பம் போல முந்தைய இயல்பு நிலைப்படி வாழ அனுமதித்தால் அது தொற்று பரவலை மிகப்பெரிய அளவுக்கு கொண்டு போய் விட்டுவிடும். இதன் விளைவாக மிகப்பெரிய அளவில் உயிரிழப்பை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்றார்.

வடக்கு அயர்லாந்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ராபின் ஸ்வான் கூறுகையில், “ஆறு வார முழு ஊரடங்கு என்பது கடந்த மார்ச் மாதத்தில் இருந்தது போன்ற கட்டுப்பாட்டுக்கு திரும்பியுள்ளதாகும்.

முடி திருத்தகம் உள்ளிட்ட மிக நெருக்கமாக சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் மூடப்படும். பப், ரெஸ்டாரண்ட் உள்ளிட்டவை டேக் அவே, டோர் டெலிவரி செய்ய மட்டுமே அனுமதிக்கப்படும்.

கடுமையான கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும். இரவு எட்டு மணி முதல் காலை ஆறு மணி வரை ஒன்று கூடல்கள் மேற்கொள்வது அனுமதிக்கப்படமாட்டாது” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter