கொரோனா பரவல்: ஆறு வார முழு ஊரடங்குக்கு பரிந்துரைத்த சுகாதாரத் துறை அதிகாரிகள்!

health, officials, propose, கொரோனா
(Image: PA Media)

கொரோனா பரவல் அதிகரிப்பைத் தொடர்ந்து, வடக்கு அயர்லாந்தில் ஆறு வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் பரிந்துரை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் 2ம் அலை கொரோனா பரவல் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. முழு ஊரடங்கு இருந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்தது.

முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டு, மூன்று நிலை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட பிறகு நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், கிறிஸ்துமஸ் தளர்வு தேவையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வடக்கு அயர்லாந்தில் செவ்வாய் கிழமை 12 பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். 656 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில் வடக்கு அயர்லாந்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஆறு வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். டிசம்பர் 28ம் தேதியில் இருந்து ஊரடங்கை கொண்டு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதைப் படிச்சீங்களா: கொரோனா பரவலைத் தடுக்க கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைக் குறைத்துக்கொள்ள கோரிக்கைவிடுத்த போரிஸ் ஜான்சன்!

இதற்கு வடக்கு அயர்லாந்து அரசு ஒப்புதல் வழங்க உள்ளதாகவும் நான்கு வாரங்கள் கழித்து ஊரடங்கை முடிப்பதா அல்லது நீட்டிப்பதா என்பது பற்றி முடிவெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வடக்கு அயர்லாந்து விருந்தோம்பல் துறை தலைமை நிர்வாகி கொலின் நீல் இது குறித்து கூறுகையில், “கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வர முழு ஊரடங்கு அவசியமாக இருக்கிறது. தற்போதைய தேவையாகவும் ஊரடங்கு உள்ளது.

இந்த ஊரடங்கு உணவு சேவைத் துறையைப் பாதித்தாலும் இந்த மோசமான கொரோனா தொற்று பரவல் நேரத்தில் அனைத்தையும் திறந்து வைப்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

மருத்துவமனைகளின் நிலையை நாம் அனைவரும் கண்கூடாகக் காணலாம். கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் செய்தது போன்ற தற்போதும் செய்யும் சூழலுக்கு நாங்கள் திருப்பிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

நாட்டின் பல பகுதிகளில் மேலும் மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரித்துக்கொண்டே செல்வது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திக்கொண்டே செல்கிறது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter