கொரோனா பாதுகாப்பான நாடு பட்டியலிலிருந்து அடுத்து நீக்கப்படும் குரோஷியா!

லண்டன் விமானநிலையத்தில் கொரோனா பரிசோதிக்கப்படும் பயணி (Image: forbes.com).

பாதுகாப்பான பயணம் பட்டியலில் இருந்து அடுத்து குரோஷியா உள்ளிட்ட மேலும் சில நாடுகள் நீக்கப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்திருப்பது அந்த நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள இங்கிலாந்து மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் போர்ச்சுக்கல் சேர்க்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் பல நாடுகளில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வருபவர்கள் 14 நாள் சுய தனிமைப்படுத்துதலுக்கு ஆளாக வேண்டும் என்று இங்கிலாந்து அரசு அறிவித்து வருகிறது. ஸ்பெயின் தொடங்கி, பிரான்ஸ், மால்டா உள்பட பல நாடுகள் வரிசையாக இந்த சுய தனிமைப்படுத்தல் லிஸ்டில் இடம் பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மேலும் சில நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற வேண்டியிருக்கும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளன. இந்த பட்டியலில் முதல் இடத்தில் குரோஷியா பெயரும் உள்ளது. தற்போது இங்கிலாந்தில் இருந்து பலரும் குரோஷியாவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இருந்து குரோஷியா பெயர் நீக்கப்படும் என்ற தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் இனி போர்ச்சுக்கல்லில் இருந்து வருபவர்களுக்கு 14 நாள் சுய தனிமைப்படுத்தல் தேவையில்லை என்று அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதுகாப்பா நாடுகள் பட்டியலில் போர்ச்சுக்கல் சேர்க்கப்பட்டுள்ளது.

சமீப நாட்களாக குரோஷியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த புதன் கிழமை அந்நாட்டில் அதிகபட்சமாக 219 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதில் பிரபல கால்பந்து வீரரும் ஒருவர்.

கடந்த 14 நாள் கணக்கு அடிப்படையில் ஒரு லட்சம் பேருக்கு 37.7 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது இங்கிலாந்தில் 21 என்ற அளவிலேயே உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இங்கிலாந்தில் இருந்து 8.75 லட்சம் பேர் குரோஷியாவுக்கு சென்றுவந்துள்ளனர். தற்போதும் ஏராளமானோர் அங்கு இருப்பதால் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இருந்து குரோஷியா நீக்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வருபவர்களுக்கு கொரோனா 14 நாள் சுய கட்டுப்பாடுகள் தளர்வு வழங்கப்பட்டது. அங்கு கொரோனா அதிகரிக்கவே கடந்த ஜூலை 27ம் தேதி ஸ்பெயினில் இருந்து வருபவர்களுக்கு மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 31ம் தேதி லக்சம்பெர்க்கில் இருந்து வருபவர்களுக்கும், ஆகஸ்ட் 8ம் தேதி பெல்ஜியம், அடோரா, பகாமாசில் இருந்து வருபவர்களுக்கும், ஆகஸ்ட் 15ம் தேதி பிரான்ஸ், நெதர்லாந்து, மால்டா, மொனாகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வருபவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அரசு விதியை பின்பற்றி மக்கள் தங்கள் வீடுகளிலேயே 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும். இதை மீறுபவர்களுக்கு இங்கிலாந்தில் 1000 பவுண்டும், வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 480 பவுண்டும், ஸ்காட்லாந்தில் 5000 பவுண்ட் வரையும் அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk