அடுத்த 20 ஆண்டுகளில் இங்கிலாந்து மிக மோசமான குடிநீர் பிரச்னையை சந்திக்கும்! – நிபுணர்கள் எச்சரிக்கை

இங்கிலாந்து அடுத்த 20 ஆண்டுகளில் மிக மோசமான குடிநீர் பிரச்னையை  எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக பொது கணக்குக் குழு நிபுணர்கள் எச்சரிக்கைவிடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்துக்கு குடிநீர் வழங்கும் அனைத்து அமைப்புக்களுமே குடிநீர் பஞ்சம் ஏற்படுவதற்கு பொறுப்பாக இருக்கும். இப்போதே உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கண்டிப்பாக ஒரு நாள் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பொது கணக்கு குழு தெரிவித்துள்ளது. தினமும் 3 பில்லியன் லிட்டர் அளவுக்கு தண்ணீர் வீணாகி வருவதை யாரும் பொருட்படுத்துவது இல்லை. இதை எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. மொத்த தண்ணீரில் ஐந்தில் ஒரு பங்கு நீர்கசிவு மூலமாக வீணாகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் தண்ணீர் கசிவைப் பற்றி தண்ணீர் விநியோகம் செய்யும் எந்த ஒரு நிறுவனமும் பெரிய அளவில் கவலைப்பட்டது இல்லை.

கமிட்டியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மெக் ஹில்லர் கூறுகையில், “குழாயைத் திறந்தால் போதுமான அளவு சுத்தமான குடிநீர் கிடைக்காது என்பதை நினைத்துப் பார்க்கும்போதே கடினமாக உள்ளது. உண்மையில் அதைத்தான் நாம் எதிர்கொள்ள இருக்கிறோம். வெற்று காலநிலை மாற்ற வார்த்தைகள் மற்றும் நிதி உதவி இல்லாத பொதுமக்கள் தகவல் பிரசாரங்கள் எல்லாம் அடுத்த 20 ஆண்டுகளில் இதை சாத்தியாக்கிவிடும். டெஃப்ரா தண்ணீர் நிறுவனங்களை வழிநடத்தத் தவறிவிட்டது.

எங்கள் துறையானத 2016ம் ஆண்டே தண்ணீர் இழப்பை சரிசெய்வதில் அதிக கவனத்தை செலுத்தும்படி நிறுவனங்களை வேண்டிக்கொண்டது” என்றார்.

இது குறித்து தண்ணீர் நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. தண்ணீர் கசிவைத் தடுக்க மிகத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைவாக 7 சதவிகித கசிவு கணக்கிடப்பட்டுள்ளது. இதை முற்றிலும் இல்லாத நிலையை நோக்கி நகர்ந்து வருகிறோம். தண்ணீர் விநியோகத்தை மேம்படுத்த கட்டமைப்பை உருவாக்க நீண்டகால திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 51 பில்லியன் பவுண்ட் அளவுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு மற்றும் தண்ணீர் கசிவைத் தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்கின்றன.

சில தினங்களுக்கு முன்பு லண்டனில் தண்ணீர்க் குழாயில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்பு காரணமாக சாலையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வாகனங்கள் சிக்கியது குறிப்பிடத்தக்கது.