புதிய உச்சமாக ஒரே நாளில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று… திணறும் என்.ஹெச்.எஸ்!

Deaths Levels UK, கொரோனா
(Image: Carl Recine/Reuters)

மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து என்.ஹெச்.எஸ் திணறி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 41,38 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 357 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்து அரசின் அறிவிப்பில் 40 ஆயிரத்தைக் கடந்திருப்பது இதுவே முதன் முறை.

மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போது 20 ஆயிரத்து 406 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா உச்சத்திலிருந்த போது இருந்ததை விட அதிகமாகமாகும். அப்போது அதிகபட்சமாக 19 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக என்.ஹெச்.எஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்து மட்டுமின்றி வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்திலும் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தாங்கள் அதிக வேலை சுமையை அனுபவிப்பதாகவும் இன்னும் வரும் நாட்களில் நோயாளிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக என்.ஹெச்.எஸ் கவலை தெரிவித்துள்ளது.

லண்டனில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை தேவைப்படுபவர் என ஆம்புலன்ஸில் அழைத்து வரப்படும் நோயாளியை மருத்துவமனையில் அனுமதிக்கக் குறைந்தது 5 முதல் 7 மணி நேரம் ஆகிறது என்று ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த அளவுக்கு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

ஏப்ரல் மாதத்தில் கொரோனா உச்சக்கட்டத்தின் போது நோய்த்தொற்று விகிதம் மிக அதிகமாக இருந்தது என்று கருதப்படுகிறது. ஆனால் அப்போது உண்மையான எண்ணிக்கையைக் கண்டறிய சோதனை திறன் மிகவும் குறைவாகவே இருந்தது.

தற்போது பரிசோதனைகள் அதிக அளவில் நடக்கின்றன. அதனால் அதிக அளவில் தொற்று கண்டறியப்படுகிறது. இருப்பினும் அரசின் இந்த புள்ளிவிவரம் தொடர்பாகவும் சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.

கிறிஸ்துமஸ் காரணமாக சில சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், இது முழுமையான தரவாக இருக்காது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

வரும் தகவல் எல்லாம் அதிர்ச்சி ரகமாகவே உள்ளதால் மக்கள் விழிப்புடன் இருப்பது நல்லது!

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter