பாலியல் வழக்கில் கன்சர்வேட்டிவ் முன்னாள் எம்.பி குற்றவாளி! – நீதிமன்றம் அறிவிப்பு

சார்லி எல்பிக் உடன் அவரது மனைவி நடாலி (Image: PA MEDIA)

கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி சார்லி எல்பிக் இரண்டு பெண்களிடம் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

டோவரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லி எல்பிக் (49). கடந்த 2007ம் ஆண்டு பாலியல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர். அதன் பிறகு 2016ம் ஆண்டு அவர் மீது மேலும் இரு பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அந்த வழக்கில் எல்பிக் குற்றவாளி என்று நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

எல்பிக்குக்கு வருகிற செப்டம்பர் மாதம் தண்டனை அறிவிக்கப்படும். இதனால் சார்லி எல்பிக்கின் மனைவியும் டோவரின் நாடாளுமன்ற உறுப்பினருமான நடாலி அதிர்ச்சியடைந்துள்ளார். சார்லி எல்பிக்குடனான திருமண வாழ்க்கை இன்றுடன் முடிந்துவிட்டது என்று அறிவித்துள்ளார்.

சவுத்வாக் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையை காண நாடலி எல்பிக்கும் வந்திருந்தார். அப்போது நீதிமன்றம் எல்பிக் குற்றவாளி என்று அறிவித்ததால் அவர் அதிர்ச்சியுற்றார். இது குறித்து அவர் கூறுகையில், “நீதிமன்ற தீர்ப்பு ஆழ்ந்த துக்கத்தைத் தருகிறது. நான் நேசித்த ஒரே மனிதருடனான என் 25 ஆண்டு கால திருமண வாழ்க்கையை இன்றுடன் முடிக்கிறேன்” என்றார்.

இது குறித்து அவர் ட்வீட் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த மூன்று ஆண்டுகளாக சந்தித்த அதிர்ச்சிகரமான நிகழ்வுகளில் இருந்து மீள கொஞ்சம் தனிப்பட்ட இடத்தையும் நேரத்தையும் கேட்கிறேன். இது தொடர்பாக வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

செப்டம்பர் 15ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி விம்பிள் கூறியுள்ளார். அது வரைக்கும் எல்பிக்குக்கு பெயில் வழங்கி உத்தரவிட்டார். அதன் பிறகு உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று கூறினார்.

2007ம் ஆண்டு அவர்களுக்கு குழந்தை பிறந்த நேரத்தில் எல்பிக் வீட்டில் இருந்த 30 வயது பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக குற்றச்சாட்டுக்கு ஆளானார். தற்போது 2016ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பணியாற்றிய 20 வயது பெண்ணின் உடல் பாகங்களைத் தொட்டு அத்துமீறல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

தொடர்ந்து எல்பிக் மீது குற்றச்சாட்டு வரவே 2017ம் ஆண்ட நவம்பர் மாதம் அவர் கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். மூன்று பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானதால் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டோவர் நாடாளுமன்ற உறுப்பினராக அவரது மனைவி நட்டாலி வெற்றி பெற்றார்.

இது குறித்து சி.பி.எஸ்-ன் நடாலி டாசன் கூறுகையில், “அவர் தொடர்ந்து பொய் கூறி வந்தார். தன்னுடைய தவறுகளுக்கு, நடத்தைகளுக்குப் பொறுப்பேற்காமல் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை காயப்படுத்தி வந்தார். இன்று வந்த தீர்ப்பு பாலியல் தவறு செய்பவர்களுக்கு அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தண்டனை கிடைக்கும் என்பதை உறுதி செய்கிறது” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk