வடக்கு அயர்லாந்தில் கட்டாய முகக் கவசம்! – திங்கட்கிழமை முதல் அமல்

கொரோனா, Covid, R number fallen
(Image: telegraph.co.uk)

வடக்கு அயர்லாந்தில் வணிக நிறுவனங்கள், கடைகளுக்குள் முகக் கவசம் அணிவது வருகிற திங்கட்கிழமை முதல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள் அரங்க பப்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக யு.கே-வில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இங்கிலாந்தில் கடைகள், ஷாப்பிங் சென்டர் உள்ளிட்டவற்றுக்குள் செல்லும்போது முகக் கவசம் அணிவது கட்டாயம் என்ற விதி அமலில் உள்ளது. மீறுவோருக்கு 100 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வடக்கு அயர்லாந்தில் வருகிற திங்கட்கிழமை முதல் பொது மக்கள் கூடும் உள் அரங்கு போன்ற இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்அரங்க பப்களும் மூடப்படுகிறது. எவ்வளவு நாட்களுக்கு இந்த விதி அமலில் இருக்கும் என்பது பற்றி சுகாதாரத் துறை அமைச்சருடன் ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதல் அமைச்சர் அர்லீன் ஃபோஸ்டர் கூறுகையில், “கொரோனா சமூகப் பரவல் அளவு பற்றிய கவலை மற்றும் பள்ளிகளைத் திறப்பதில் காட்டும் அதீத அக்கறை காரணமாக பொது வீடுகளை மீண்டும் திறப்பதை நிறுத்துவது விவேகமானது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்றார்.

அதே நேரத்தில் பள்ளிகள் முழு நேரமும் செயல்படும். அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது உணவு விற்பனையுடன் செயல்படும் பப், பார்களுக்கு அனுமதி உள்ளது. உணவு விற்பனை இல்லாத பார், பப் விரைவில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போதைய சூழலில் இந்த பப், பார்கள் திறக்கப்படுவது தாமதம் ஆகும் என்று தெரிகிறது.

வடக்கு அயர்லாந்தில் கொரோனா சமூக பரவல் குறைவாகவே உள்ளது. இருப்பினும் ஜூலை தொடக்கத்திலிருந்ததை விட தற்போது சிறிய உள்ளூர் அளவிலான கிளஸ்டர்கள் கண்டறியப்படுகின்றன. அதே நேரத்தில் ஜூலை மாதம் முதல் வாரத்தைக் காட்டிலும் தற்போது சோதனை மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டியது அவசியம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த பகுதியில் 20க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் கிளஸ்டர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார நிறுவனம் (பி.எச்.ஏ) தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk