ஃபேஸ் மாஸ்க் நக்கட்ஸ்… மெக்டோனல்ஸ் உணவகம் தந்த அதிர்ச்சி

சிக்கன் நக்கட்ஸ் உள்ளே இருக்கும் மாஸ்க் (Image: BPM MEDIA)

ஹாம்ப்ஷயரில் உள்ள மெக்டோனல்ஸ் உணவகத்தில் சிக்கன் நக்கட்ஸில் ஃபேஸ் மாஸ்க் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஹாம்ப்ஷயர் ஆல்ட்ஷாட்டில் உள்ள மெக்டோனல்ஸ் துரித உணவகத்தில், 32 வயதான லாரா ஆர்பர் தன்னுடைய மூன்று குழந்தைகளுன் சிக்கன் நக்கட்ஸ் உள்ளிட்டவற்றுக்கு ஆர்டர் செய்துள்ளார்.

வெளியே சென்று திரும்பும் வழியில் அந்த உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு அவர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். வீட்டில் சாவகாசமாக அமர்ந்து உணவுப் பொருட்களைப் பிரித்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார் லாரா. அப்போது ஆறு வயது மகள் சிக்கன் நக்கட்சை சாப்பிட முடியாமல் மூச்சுத் திணறியது போன்ற நிலையில் இருப்பதைக் கண்டார். அவர் சாப்பிட்ட நக்கட்சில் ஃபேஸ்மாஸ்க் இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “என்னுடைய மகள் அப்போதுதான் சிக்கன் நக்கட்ஸ் சாப்பிட ஆரம்பித்தாள். அதை மெல்ல முடியாமல் மூச்சுத் திணறியது போல் ஆனாள். உடனடியாக அவளுடைய தொண்டைக்குள் விரலை விட்டு சிக்கன் நக்கட்ஸை வெளியே எடுத்தேன். உள்ளே நீல நிறத்தில் ஏதோ இருந்தது. இது என்ன புதிய பொருளாக இருக்கிறதே என்று அதிர்ச்சியில் அதைப் பார்த்தேன்.

அது கட்டாயம் சிக்கன் நக்கட்ஸ் இல்லை. எனவே, மற்ற நக்கட்ஸை பிய்த்து பார்த்தபோது அவற்றில் முகக் கவசம் இருப்பதைக் காண முடிந்தது. உடனடியாக இது குறித்து மெக்டோனல்ஸ் கிளையைத் தொடர்புகொண்டு பேசினேன்.

கிளை மேலாளர் சிக்கன் நக்கட்ஸ் இங்கு தயாரிக்கப்படுவது இல்லை என்று கூறினார். மேலும், நடந்த தவறுக்கு அந்த மேலாளர் மன்னிப்பு கூட கேட்கவில்லை. தொடர்ந்து அங்கு சிக்கன் நக்கட்ஸ் விற்பனை செய்யப்பட்டு வந்தது மேலும் அதிர்ச்சியைத் தந்தது.

துரித உணவு நிர்வாகம் இந்த பிரச்னையை இவ்வளவு அஜாக்கிரதையாக கையாளுகிறதே என்ற அதிர்ச்சி ஒரு புறம் இருந்தாலும், என்னுடைய மகள் தனியாக இதை சாப்பிட்டிருந்தால் என்ன ஆகியிருப்பாள் என்ற கவலை ஏற்பட்டது. நிச்சயம் உணவுக்குழாயில் அதை அடைப்பை ஏற்படுத்தியிருக்கும். என்னுடைய மகள் இறந்து போயிருக்கும் வாய்ப்பும் இருந்தது” என்றார்.

இது குறித்து மெக்டோனல்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளருக்கு நேர்ந்த மோசமான நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். உணவு பாதுகாப்பே எங்களின் அதிமுக்கிய கவனம். இந்த சம்பவம் பற்றி நாங்கள் கேள்வியுற்றதும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டோம்.

முழு பணத்தையும் திரும்ப அளிக்க முன் வந்தோம். அந்த உணவுப் பொருளை எங்களிடம் திரும்பி அளிக்கவும் கேட்டுக்கொண்டோம். அப்போதுதான் தவறு எங்கு நேர்ந்தது என்று கண்டறிந்து, இனி இது போன்று சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk