மீண்டும் மீண்டும் ஃபேஸ் மாஸ்க் அணிய மறுந்தால் 3200 பவுண்ட் அபராதம்! – போரிஸ் ஜான்சன் அதிரடி

Boris Johnson, apologises
பிரதமர் போரிஸ் ஜான்சன் (Image: CNN)

தொடர்ந்து ஃபேஸ் மாஸ்க் அணிய மாட்டேன் என்று முரண்டு பிடிப்பவர்களுக்கு 3200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என்று என்று போரிஸ் ஜான்சன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா உயிரிழப்பு அச்சம் காரணமாக மக்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது. ஆனால், யாரும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

தற்போது கடைகளுக்குள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற நிலை உள்ளது. மாஸ்க் அணியாதவர்களுக்கு 100 பவுண்ட் வரைக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை 15 நாட்களுக்குள் செலுத்துபவர்களுக்கு 50 சதவிகித தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஆனாலும், பலரும் முகக் கவசம் அணிய மறுத்து வருவது வேதனையாக உள்ளது.

இந்த நிலையில் போரிஸ் ஜான்சன் மிகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரக்கைவிடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், முதல் முறை முகக் கவசம் அணியவில்லை என்றால் அவர்களுக்கு 100 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும், இரண்டாவது முறையும் தொடர்ந்தால் 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும். இப்படியே அபராதம் இரட்டிப்பாகிக்கொண்டே செல்லும். அதிகபட்சமாக 3200 பவுண்ட்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.

அதே போல் சட்ட விரோத ஒன்று கூடல்களைத் தவிர்க்கவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத இசை நிகழ்ச்சி, கேளிக்கை, ஒன்று கூடலைக் கூட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்படும். வருகிற 15ம் தேதி முதல் இன்டோர் தியேட்டர், மியூசிக் மற்றும் இதர நிகழ்வுகள் நடக்கும் இடங்கள் சமூக இடைவெளி விதிகளுடன் திறக்கப்படும். இதைத் தவிர்த்து 30 பேருக்கு அதிகமான ஒன்றுகூடல் நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கொரோனா தளர்வுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் அமலுக்கு வர இருந்தன. ஆனால், மான்செஸ்டர், பிளாக்பர்ன், பிராட்போர்டு போன்ற இடங்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. மற்ற பகுதிகளில் வைரஸ் பரவல் அதிகரித்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பிரதமர் கூறுகையில், “ஒவ்வொரு கட்டத்திலும் சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த கொரோனா பரவல் தடுப்பைப் பொருத்து தளர்வுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தேன். இன்றைக்கு மேலும் சில மக்கள் தங்கள் வேலைக்குத் திரும்பும் வகையில் சில மாற்றங்களை அறிவித்துள்ளோம். நான் எப்போதும் கூறுவது போல தேவை ஏற்பட்டால் மீண்டும் தடைகளைக் கொண்டுவரத் தயங்க மாட்டோம். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் உள்ளூர் நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவோம்.

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அரசு கொண்டுவந்த விதிகளை பின்பற்றி கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவினார்கள். அந்த மன நிறைவோடு நாம் இருந்துவிட முடியாது, கொரோனாவைக் கட்டுப்படுத்த நாம் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk