முழு ஊரடங்கைத் தவிர்க்க விதிமுறைகளை பின்பற்றுங்கள்! – பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

பிரதமர் போரிஸ் ஜான்சன் பேட்டி அளித்த காட்சி. (Image: BBC)

இங்கிலாந்தில் 2வது ஊரடங்கு அமல்படுத்துவதை தவிர்க்க பொது மக்கள் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த வார இறுதியில் அறிவிக்கப்பட இருந்த தளர்வுகளை இரண்டு வாரங்களுக்கு அரசு ஒத்திவைத்துள்ளது.

இது குறித்து டவுனிங் ஸ்ட்ரீட் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், “வைரஸ் பரவல் மீண்டும் பெரிய அளவில் பரவுவதைத் தடுக்க பிரேக் பெடல் மீது அழுத்தம் கொடுக்கும் நேரம் இது” என்றார்.

மேலும் அவர் கேசினா, பவுலிங் போன்ற சொகுசு விளையாட்டு பொழுது போக்குகளைத் திறப்பதை தள்ளி வைப்பதாகவும், பியூட்டி சலூன் போன்ற மிக நெருக்கமான சேவை தரும் மையங்களின் செயல்பாடுகள் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்தார்.

மேலும் அவர், “முகக் கவசம் அணிவது தொடர்பான விதிமுறைகள் ஆகஸ்ட் 8ம் தேதிக்குப் பிறகு விரிவாக்கம் செய்யப்படும். அதாவது, பொது மக்கள் உள் அரங்குகளான மியூசியம், கேலரி மற்றும் சினிமா போன்ற இடங்களிலும் கூட முகக் கவசம் அணிய வேண்டும். இது தொடர்பாக மிகக் கடுமையான காவல்துறை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்.

பைலட் ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகள் ஆகஸ்ட் 1 முதல் ரத்து செய்யப்படுகிறது. திருமண வரவேற்புகளில் 30 பேர் வரை மட்டுமே பங்கேற்க முடியும்.

அதே நேரத்தில் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கை சில வழிகாட்டுதல்களுடன் சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். சிறந்ததை நாம் நம்ப வேண்டும். மோசமானதை எதிர்கொள்ளத் திட்டமிட வேண்டும். மக்கள் விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக நடந்துகொள்ளாவிட்டால் அரசு இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். முழு தேசிய ஊரடங்குக்கு திரும்புவதற்கு அது வழிவகுத்துவிடும்.

இந்த நிலையில் சமூக அளவில் தொடர்புகொள்வதைத் தடுக்கும் விதிகள் எதுவும் கொண்டுவரவில்லை. மக்களிடம் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று கூறவில்லை. அதே நேரத்தில் பொது மக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல், பாதுகாப்பாக நடந்துகொள்ளாமல் இருந்தால் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர வேண்டியிருக்கும்.

எதிர்காலத்தில் நாம் நிறைய விஷயங்களை செய்ய வேண்டும் என்றால், நாம் இப்போது குறைவான விஷயங்களை செய்ய வேண்டியிருக்கும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk