ஊழல் ஆவணங்களை வெளியிடுவதாக கூறிய கஜகஸ்தான் இளைஞர் லண்டனில் மர்ம மரணம்!

Aisultan Nazarbayev
உயிரிழந்த ஐசுல்தானின் கோப்பு புகைப்படம் (Image: Facebook)

கஜகஸ்தான் நாட்டில் நடந்த மிகப்பெரிய ஊழல் மோசடி தொடர்பான ஆவணங்களை வெளியிடப் போவதாக அறிவித்த கஜகஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபரின் பேரன் ஐசுல்தான் லண்டனில் மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஜகஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் நர்சுல்தான் நசர்பாயேவின் பேரனும் கஜகஸ்தான் நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் தாரிஹா நசர்பாயேவின் மகனுமான ஐசுல்தான் நசர்பாயே லண்டனில் நேற்று (ஆகஸ்ட் 16)ம் தேதி காலமானார். இவரது மரணத்தை தாய் தாரிஹா நசர்பாயே உறுதி செய்துள்ளார்.

கஜகஸ்தான் நாட்டுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்த ஒப்பந்தங்கள் தொடர்பாக பல கோடி பவுண்ட் முறைகேடு நடந்துள்ளதாகவும் இது தொடர்பான ஆவணங்களை வெளியிடப் போவதாகவும் ஐசுல்தான் சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் லண்டனில் அவருடைய வீட்டில் இறந்து கிடந்தார். போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினர். மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக ஐசுல்தான் உயிரிந்ததாக தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 29 தான் ஆகிறது.

அரசியலில் தீவிர ஆர்வம் கொண்டவராக ஐசுல்தான் இருந்து வந்தார். அங்கு நடக்கும் ஊழல், முறைகேடுகள் பற்றித் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். இதனால் கஜகஸ்தானில் அவருக்கு ஆதரவு அதிகரிக்க ஆரம்பித்தது. தீவிர அரசியல் பின்னணி கொண்டவர் என்பதால் கஜஸ்தானின் அடுத்த தலைவராக ஐசுல்தான் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டு பத்திரிகைகள் எழுதின.

இந்த நிலையில் ஊழல், மோசடி ஒப்பந்த ஆவணங்களை வெளியிடுவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதற்குள்ளாக அவர் மரணம் அடைந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 29 வயதில் எப்படி மாரடைப்பு வரும் என்று அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அரசின் முறைகேடு பற்றி வெளியிடுவதாக கூறியதால் ரஷ்யா உளவாளிகள் அவரை கொன்றிருக்கலாம் என்று சந்தேகம் கிளப்புகின்றனர்.

ஐசுல்தானுக்கு போதை பழக்கம் உள்ளது என்று கூறப்படுகிறது. 2017ம் ஆண்டு இதை அவர் வெளிப்படையா ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது. இவரது தந்தை ரகாத் அலியேவ் ஆஸ்திரியாவில் அரசியல் தஞ்சம் புகுந்தவர். அங்கு சிறையில் அடைக்கப்பட்ட அவர் விசாரணையில் மர்மமான முறையில் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஐசுத்தான் கடந்த பிப்ரவரி மாதம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் தஞ்சம் கோரியிருந்தார். உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதால் இங்கிலாந்தில் தங்கியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு தான் அவர் கஜஸ்தான் சென்றுவிட்டு லண்டன் திரும்பினார். லண்டன் திருப்பிய ஒரு நில நாட்களில் அவர் உயிரிழந்துள்ளார் என்பது சந்தேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk