இங்கிலாந்தில் ஜிம், நீச்சல் குளங்கள் ஜூலை 25ம் தேதி முதல் செயல்பட அனுமதி!

இங்கிலாந்தில் நான்கு மாதங்களாக மூடப்பட்டுள்ள ஜிம், நீச்சல் குளங்கள் ஜூலை 25ம் தேதி முதல் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதம் ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. கொரோனா பரவல் மிகக் குறைவாக உள்ள நிலையில் தளர்வு அளிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கைவிடுத்தனர். இதன் அடிப்படையில் கடந்த சனிக் கிழமை முதல் பப், ரெஸ்டாரண்ட், தியேட்டர் உள்ளிட்டவை செயல்பட அனுமதிக்கப்பட்டது.

அப்போதே ஜிம், நீச்சல் குளம் உள்ளிட்டவை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு அறிவிக்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

இது தொடர்பாக கலாச்சார செயலாளர் ஆலிவர் டவுடன் இன்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறது. நாடு முழுக்க லட்சக் கணக்கில் ஜிம் திறப்பு பற்றிக் காத்திருக்கும் மக்களுக்கு நல்ல செய்தி… அவர்கள் குதிக்கலாம், சைக்கிள் மதிக்கலாம், அல்லது விருப்பம் போல நீச்சல் அடிக்கலாம். எங்களின் முழுமையான வழிகாட்டுதல்கள் ஜிம், நீச்சல் குளம், ஓய்வு மையங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உதவி மீண்டும் இவை செயல்பட அனுமதிக்கும். ஜிம் திறக்க அனுமதிப்பதன் மூலம் மக்கள் தங்கள் உடல் நலத்தை மேம்படுத்தி வைரஸை வீழ்த்துவார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.

உடல் பருமன், மிக மோசமான மன நலம் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு உடற்பயிற்சி செய்தல் நல்ல தீர்வாக உள்ளது. ஊரடங்கு மக்கள் மத்தியில் செயல்பாடு குறைவை ஏற்படுத்திவிட்டது. ஆரோக்கியமற்ற உணவு அதிகம் உட்கொள்ளத் தூண்டிவிட்டது. ஜிம் திறப்பு மூலம் அனைத்தும் மாறி, மக்கள் ஃபிட்டாக மாறுவார்கள் என்று பலரும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.