கடலில் மூழ்கிய குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் உயிர் தியாகம் செய்த தந்தை! – வேல்ஸில் சோகம்

உயிரிழந்த ஸ்டீவன்சன் தன்னுடைய குடும்பத்தினருடன். (Image: Laura Burford)

வேல்சில் பார்மவுட் கடற்கரையில் அலையில் சிக்கிய குழந்தையைக் காப்பாற்றச் சென்று தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்ஃபோர்டில் உள்ள வூட்ஸைட் பகுதியைச் சேர்ந்தவர் ஜோனத்தன் ஸ்டீவன்ஸ். வேல்ஸ் பார்மவுத் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 36 வயதான ஸ்டீவன்ஸ் தன்னுடைய குடும்பத்தினர் விடுமுறையை கழித்துக் கொண்டிருந்தார். அவருடைய குழந்தைகள் கடலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

எதிர்பாராத விதமாக அவரது, மூன்று குழந்தைகள் கடல் அலையில் மாட்டிக் கொண்டனர். உடனடியாக ஸ்டீவன்ஸ் கடலில் இறங்கி குழந்தைகளை காப்பாற்றினார். மூன்று குழந்தைகளும் கரைக்கு வந்த நிலையில், ராட்சத அலையில் அவர் சிக்கிக் கொண்டார். உடனடியாக மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மீட்புக் குழுவினர், ஆம்புலன்ஸ் வாகனம் என அனைத்தும் அந்த பகுதிக்கு விரைந்து வந்தன. கடைசியில் ஹெலிகாப்டர் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இது தொடர்பாக நார்த் வேல்ஸ் போலீசார் கூறுகையில், “போலீசும், கடலோர பாதுகாப்பு படையும் பிற்பகல் 1.58 மணி அளவில் அழைக்கப்பட்டனர். கடலில் சிக்கிய நபரை ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர் இறந்துவிட்டார்” என்றனர்.

இது குறித்து ஸ்டீவன்சின் சகோதரி கூறுகையில், “ஏழு குழந்தைகளின் தந்தை, அருமையான மகன், ஐந்து சகோதரிகளின் சகோதரின் இறந்துவிட்டான். தன்னுடைய குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற தன்னுடைய உயிரை துச்சமென மதித்து இறங்கினான். சிறந்த தந்தை, மகன், சகோதரன் என்ற வகையில் அவன் என்றென்றும் நினைவு கூறப்படுவான்” என்றார்.

இறந்த ஸ்டீவன்சின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் அவரது நண்பர்கள் நிதி திரண்டும் பணியில் இறங்கியுள்ளனர்.  ஐந்தாயிரம் பவுண்ட் நிதி திரட்டுவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 4,565 பவுண்ட் திரட்டப்பட்டுள்ளது. குழந்தைகளை காப்பாற்றிவிட்டு ஏழு குழந்தைகளின் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk