இங்கிலாந்தில் மீண்டும் மிகப்பெரிய ரயில் விபத்து… விண்ணைத் தொடும் உயரத்துக்கு நெருப்பு… 300 குடும்பங்கள் வெளியேற்றம்!

Llangennech
தீப்பற்றி எரியும் சரக்கு ரயில். (Image: Twitter / @RussMyners)

லாங்கேன்னெக், 27 ஆகஸ்ட் 2020: இங்கிலாந்தில் மீண்டும் ஒரு மிகப்பெரிய ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. டீசல் எடுத்துச் சென்ற சரக்கு ரயிலில் தீபத்து ஏற்பட்டதால் விண்ணைத் தொடும் அளவுக்கு நெருப்பும் கரும் புகையும் வெளிப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் பயணிகள் ரயில் பெட்டி தடம்புரண்டு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக விபத்து ஏற்பட்டது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் , வேல்ஸின் லாங்கேன்னெக் பகுதியில் டீசல் டேங்கர் சரக்கு ரயில் தீப்பிடித்துள்ளது. இங்கிலாந்து நேரப்படி புதன்கிழமை இரவு விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு 11.29 மணி அளவில் பிரிட்டிஷ் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். சரக்கு ரயிலில் டீசல் உள்ளிட்ட எரிபொருள் எடுத்துச் செல்வதால் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவில் விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க பாதுகாப்புப் படையினர் போராடி வருகின்றனர்.

ஸ்டோன்ஹேவன் அருகே ரயில் தடம் புரண்டு விபத்து செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

பயங்கர தீ, வெடிவிபத்து ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள அந்த பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர். இரவு விபத்து ஏற்பட்டுத் தீப்பற்றிக் கொண்டாலும், விடிய விடிய தீ எரிந்து கொண்டிருந்தது. 800 மீட்டருக்கு அப்பால் வசிக்கும் மக்கள் முதலில் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. ரயிலில் இருந்த இரண்டு பணியாளர்களும் பத்திரமாக உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தீ தொடர்ந்து எரிவதால் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். பி.டி.பி, சவுத் வேல்ஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை பிரிவினர் தீயணைப்பு மற்றும் அபாயம் தவிர்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தீயணைக்கப்பட்டதும் விபத்துக்கான காரணம், இழப்பு தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெம்பிரைஷேயரில் உள்ள மில்ஃபோர்ட் ஹெவனில் இருந்து ரீடிங்கிற்கு அருகில் உள்ள தியேலுக்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. டேங்கர் வேகன்களில் இருந்து எரிபொருள் கசிந்து வருகிறது. அவை அருகில் உள்ள லூகோர் நதியில் கலக்கிறது. இப்படி டீசல் உள்ளிட்டவை ஆற்றில் கலப்பது நல்லது இல்லை, அதைத் தடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk