ஸ்டோன்ஹேவன் அருகே ரயில் தடம் புரண்டு விபத்து! – 3 பேர் பலி

அபெர்டீன்ஷேயர் அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட மூன்று பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஸ்காட்லாந்து அபெர்டீன்ஷேயரில் ஸ்டோன்ஹெவன் அருகே இன்று காலை 6.30 மணி அளவில் பயணிகள் ரயில் தடம் புரண்டது. இதைத் தொடர்ந்து அங்கு 30க்கும் மேற்பட்ட அவசர கால வாகனங்கள் அழைக்கப்பட்டுள்ளன. மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், மிகப்பெரிய விபத்து நிகழ்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தில் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ரயில் தண்டவாளங்கள் மணலில் சிக்கியுள்ளன. இதன் காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Image: Twitter)

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டிஷ் டிரான்ஸ்போர்ட் போலீஸ், “இது சோகமான சம்பவம். துணை மருத்துவப் பணியாளர்கள் தீவிரமாக பணிகளை செய்து வருகின்றனர். தற்போதைய நிலையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்” என்றார்.

இந்த ரெயில் இரண்டு இன்ஜின்கள், அவற்றுக்கு மத்தியில் நான்கு பெட்டிகள் கொண்டதாகும். இதில் ஒரு இன்ஜினும், மூன்று பெட்டிகளும் ரயில் தண்டவாளத்தை விட்டு வெளியே விபத்தை சந்தித்துள்ளன. சம்பவ இடத்துக்கு காலை 9.43 மணி அளவில் அதிகாரிகள் வந்துள்ளனர். இந்த விபத்து காரணமாக அந்த பாதை வழியான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து மிகப்பெரிய அளவில் புகை வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பான படமும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் கூறுகையில், “விபத்தில் சிக்கியவர்களுக்கு துணையாக இருப்போம். விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு வழங்க அனைத்தும் செய்யப்படும்” என்றார். விபத்து குறித்து பிரதமரும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கு நிலச்சரிவு காரணமாக இருக்கலாம் என்றாலும், இது தொடர்பாக முழு விசாரணைக்குப் பிறகே உண்மை தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk