முகக்கவசம் விவகாரம்… கடைசி முயற்சியாக மட்டுமே தலையிடுவோம் என போலீஸ் அறிவிப்பு

Face Mask

வருகிற 24ம் தேதி முதல் இங்கிலாந்தில் கடைக்குள் இருப்பவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைக்கு வருகிறது. கடைசி முயற்சியாக மட்டுமே இந்த விவகாரத்தில் போலீஸ் தலையிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது கட்டம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை வந்ததைத் தொடர்ந்து அரசு அதைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக கடைகளுக்குள் செல்பவர்கள் மாஸ்க் அணிந்திருக்க வேண்டியது கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. கொரோனா வைரஸ் காற்றில் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் இங்கிலாந்து அரசின் இந்த நடவடிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கொரோனா வருவதைத் தவிர்க்க முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்தின் இரண்டாவது மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் சங்கிலித் தொடரான சைன்ஸ்பரி முகக் கவசத்தை கட்டாயப்படுத்தப் போவது இல்லை என்று அறிவித்துள்ளது. அதற்கு ஒத்திசைப்பது போல மெட்ரோபோலிஸ் கமிஷனரின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடைக்குள் முகக் கவசம் அணியாவிட்டால் அவர்களுக்கு 100 பவுண்ட் வரை அபாராதம் விதிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எடுத்த எடுப்பில் அப்படி செய்யப் போவது இல்லை என்று லண்டன் போலீஸ் அறிவித்துள்ளது. முகக் கவசம் அணிவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டால் கடைசி முயற்சியாக மட்டுமே தலையிடுவோம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது கொரோனா பரவல் அச்சம் உள்ளவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dame Cressida Dick

இது குறித்து மெட் கமிஷனர் டேம் கிரெசிடா டிக் கூறுகையில், “கடைகளில் முகக் கவசம் அணியாதவர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், அவர்கள் வெளியேற மறுத்து பிரச்னை செய்தால் மட்டுமே போலீசார் அந்த விவகாரத்தில் தலையிடுவார்கள். முகக் கவசம் அணியும் விவகாரத்தில் கட்டாயப்படுத்த மாட்டோம் என்று கூறும் கடை உரிமையாளர்கள் தங்களின் செயலுக்காக வெட்கப்படும் நிலை ஏற்படும். இதை செயல்படுத்தும் கடை உரிமையாளர்கள் கடைசி கட்டமாகவே போலீசாரை அழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நிச்சயமாக சட்டம் உரிமையை வழங்குகிறது என்பத உண்மைதான்.

பெரும்பாலான மக்கள் இந்த சட்டத்துக்கு உட்பட்டு நடப்பார்கள் என்று நம்புகிறேன். முகக் கவசம் அணியாமல் வரும் நபர்கள் மற்றவர்கள் வந்து முகக் கவசம் அணியச் சொல்லும்போதோ, அல்லது கடையை விட்டு வெளியேற சொல்லும்போதே அவமானத்தால் கூனிக்குறுகுவார்கள். கடைகளில் யாராவது முகக் கவசம் அணியாமல் இருப்பதால் அசௌகரியம் அடைந்தால் நிச்சயமாக அவர்கள் போலீசை அழைக்கலாம். அவர்களுக்கு போலீஸ் உதவும்” என்றார்.

மேலும் அவர், சூப்பர் மார்க்கெட்கள் தங்கள் கடைகளுக்கு சமூக இடைவெளி கடைபிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

கடந்த மே மாதத்தின் மத்தியிலிருந்து பொது இடத்துக்கு அதிலும் குறிப்பாக முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை அதிகம் சந்திக்க வாய்ப்புள்ள இடங்களுக்கு செல்லும்போது முகக் கவசம் அணிந்து செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. ஜூன் 15ம் தேதி முதல் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk