10 ஆயிரம் பவுண்ட் கோவிட் அபராதம்… போலீஸ் நிலையத்தின் மீது காரைவிட்டு தாக்குதல் நடத்திய நபர்!

smashed car, police, போலீஸ்
(Image: Gary Stone - The Sun)

கொரோனா விதிமுறைகளை மீறல் அபராதம் விதிக்கப்பட்டதால் சினிமா பட பாணியில் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் வடக்கு இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

45 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று இரவு வடக்கு லண்டனில் உள்ள எட்மண்ட் காவல் நிலையத்தின் மீது தன் காரைக் கொண்டு மோதினார்.

பின்னர் சாவகாசமாக இறங்கி வண்டியில் இருந்து பெட்ரோலை எடுத்துக் கொண்டு சாலைக்கு வந்து அங்கு ஊற்றியுள்ளார்.

அனைவரும் பதறி ஓட, அந்த நபர் பெட்ரோலுக்கு தீ வைத்து அந்த பகுதியை அதிர்ச்சியடைய வைத்தார்.

இதனால் அந்த இடத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. போலீசார் ஓடிவந்து அந்த நபரைக் கீழே தள்ளி போராடி கைவிலங்கிட்டு கைது செய்தனர்.

போலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியது, சாலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நபர் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி வந்தார் என்று கூறப்படுகிறது. அவருக்கு அடுத்த முறை 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்ததாகவும் அதனால் இப்படி செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அந்த நபருக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டதால்தான் இப்படி நடந்து கொண்டார் என்றும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் யார், எதனால் இப்படி நடந்து கொண்டார் என்பது உள்ளிட்ட எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

முதலில் இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடுப்பு போலீஸ் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, இது பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையது இல்லை என்று ஸ்காட்லாந்து யார்டு போலீசார் உறுதி செய்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தால் போலீசார், பொதுமக்கள் என யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று உறுதி செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த போலீசாருக்கு உள்துறைச் செயலர் மற்றும் லண்டன் மேயர் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இன்று 12 மணி அளவில் வெஸ்ட்மின்ஸ்டரில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வலம் வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி இருவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter