பயங்கரவாத அச்சம்… 2 பேரை கைது செய்த லண்டன் போலீஸ்!

arrested, suspicion, terrorism, பயங்கரவாத, அச்சுறுத்தல்
(Image: Met Police)

பயங்கரவாத தாக்குதல் சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை லண்டன் போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை (12 நவம்பர்) 12.10 மணி அளவில் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் கார் ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதை போலீசார் கண்டனர்.

பயங்கரவாத அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த காரில் இருந்தவர்கள் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, துப்பாக்கி ஏந்திய போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். வாகனத்தைச் சோதனை செய்த போலீசார் காரில் இருந்த இரண்டு பேரை கைது செய்தனர்.

அவர்கள் பயங்கரவாத சட்டம் 2006 பிரிவு 5ன் கீழ் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

காரில் என்ன மாதிரியான ஆயுதங்கள் சிக்கின என்பது பற்றிய தகவலை மெட் போலீசார் வெளியிடவில்லை. துப்பாக்கி கிடைத்ததாகவும் தகவல் இல்லை.

அதே நேரத்தில் காரில் கிழக்கு லண்டனைச் சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் இருந்ததாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டு மத்திய லண்டன் காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மெட் போலீசின் கவுண்டர் டெரரிசம் கமாண்ட் தலைவர் கமாண்டர் ரிச்சர்ட் ஸ்மித் கூறுகையில், “தினமும் லண்டன் போலீஸ் அதிகாரிகள் லண்டன் நகரைக் காக்கும் வகையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மிகவும் சந்தேகத்துக்கிடமான வகையில் யாருடைய செயல்பாடுகள் இருந்தாலும், குற்றம் புரியக் கூடிய வாய்ப்பு இருப்பதாக சந்தேகித்தாலும் அவர்களை கைது செய்து விசாரணை நடத்துவது வழக்கம்.

பொது மக்கள் தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் யாராவது செயல்பட்டால் அவர்கள் பற்றிய தகவலை எங்களுக்கு வழங்கலாம்.

பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியாவில் பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்திலும் அது போன்ற சம்பவங்கள் நடைபெறலாம் என்று கடந்த வாரம் பயங்கரவாத எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பொது மக்கள் மிகவும் கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் தங்கள் கைகளில் எந்த ஒரு ஆயுதத்தையும் வைத்திருக்க வேண்டாம்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter