மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சரில் 950 பேருக்கு வேலை பறிபோகிறது!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வர்த்தகம் குறைந்ததால் மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் நிறுவனம் நூற்றுக் கணக்கான வேலைகளை குறைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயத்த ஆடை, வீட்டு உபயோகப் பொருள், உணவுப் பொருட்களை சொந்த லேபிளில் தயாரித்து விற்பனை செய்து வரும் சங்கிலித் தொடர் விற்பனை நிறுவனமான மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் வருவாய் இழப்பை சமாளிக்க தன்னுடைய மொத்த ஊழியர்களில் 1.2 சதவிகிதம் பேரை நீக்குவதாக முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் 950 பேர் வரை வேலை இழப்பை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் நிறுவனத்தை சீரமைக்கும் பணியைத் தொடங்குவதாக அறிவித்தது. அதன்படி செலவைக் கட்டுப்படுத்தும் வகையில் சில விற்பனை நிலையங்களை அது மூடியது. தற்போது ஊழியர்கள் பணி நீக்கத்தை அது அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தொழிலாளர்கள் பிரதிநிதிகளுடன் நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியது. ஊழியர்களுக்கு வி.ஆர்.எஸ் எனப்படும் தாங்களாக முன்வந்து ரிட்டர்மெண்ட்டை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குவதாக அறிவித்தது.

இது குறித்து சில்லறை விற்பனை பிரிவின் இயக்குநர் சச்சா பெரென்ட்ஜி கூறுகையில், “இந்த மோசமான பெருந்தொற்று காலத்தில் கடைகளின் குழுக்களை எப்படி விரைவாகவும் நெகிழ்வாகவும் செயல்பட வைக்க முடியும் எனக் கண்டறிந்துள்ளோம். அதன் வழியில் தற்போது செயல்பட வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆதரவு அளிப்பது மற்றும் ஆலோசனை வழங்குவது எங்கள் முன்னுரிமையாக உள்ளது” என்றார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுவனத்தின் ஆடை விற்பனை 84 சதவிகிதம் அளவுக்கு குறைந்துவிட்டது. கிட்டத்தட்ட 100 மில்லியன் பவுண்ட் அளவுக்கு ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஆரோக்கியம் மற்றும் அழகுப் பொருட்கள் விற்பனை நிலையமான பூட்ஸ் 4000 வேலை இழப்புகளை அறிவித்தது. டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரான ஜான் லீவிஸ் 1300 வேலை இழப்பை அறிவித்தது. பல உணவு விற்பனை சங்கிலி நிறுவனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் மூடப்படுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk