மேற்கு லண்டன்: உணவகம் மற்றும் பேக்கரியில் பயங்கர தீவிபத்து

மேற்கு லண்டன் பார்க் ராயல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் மற்றும் பேக்கரியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 80க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். நல்லவேளையாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்தது.

மேற்கு லண்டன் பார்க் ராயல் மினர்வா சாலை பகுதியில் அமைந்துள்ள ஒரு உணவகம் மற்றும் பேக்கரியில் நேற்று மாலை 6.20 மணி அளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து லண்டன் ஃபயர் பிரிட்ஜ்க்கு (LFB) 50க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன. இதைத் தொடர்ந்து 15 தீயணைப்பு வாகனங்களில் 70க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகத்தில் ஏற்பட்ட தீ, மளமளவென உணவகம் முழுவதும் பரவியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது மிகவும் மோசமான தீவிபத்து என்று எல்.எஃப்.பி உதவி ஆணையர் கிரஹாம் எல்லிஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த தீவிபத்து காரணமாக அருகில் வசிப்போருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே நேரத்தில், உணவகத்தில் இருந்து அடர்த்தியான கரும்புகை வெளிப்பட்டது. இந்த புகை பாதிப்பில் இருந்து தப்பிக்க பொது மக்கள் தங்கள் வீட்டுக் கதவு, ஜன்னல்களைத் திறக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப் பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த உணவகத்தில் இருந்து வெளிப்பட்ட புகையை 15 கி.மீ-க்கு தொலைவில் இருந்தவர்கள் கூட பார்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி வழியாக செல்வதைத் தவிர்க்கும்படி மக்கள் கேட்டுக்கொண்டனர். இரவு முழுக்க போராடி அதிகாலை 3 மணி அளவில் தீ அணைக்கப்பட்டதாகத் தீயணைப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk