மூன்று மாதத்தில் 7000 பேர் நீக்கம்… மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் முடிவால் அதிர்ச்சி!

Marks & Spencer
(Image: theguardian.com / Maureen McLean/Rex/Shutterstock)

இங்கிலாந்தின் முன்னணி ஆடை மற்றும் சில்லறை விற்பனை நிலையமான மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் நிறுவனம் அடுத்த மூன்றாண்டுகளில் 7,000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்களை விற்பனை செய்து வரும் சங்கிலித் தொடர் நிறுவனம் மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் தொடர்ந்து ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் 950 பேரை அந்த நிறுவனம் வீட்டுக்கு அனுப்பியது. செலவைக் கட்டுப்படுத்தும் வகையில் சில ஸ்டோர்களையும் மூடியது.

கொரோனா பாதிப்பு காரணமாக அந்த நிறுவனத்துக்கு வந்த ஆடை தயாரிப்பு, உணவு தயாரிப்பு ஆர்டர்கள் பெருமளவு ரத்து செய்யப்பட்டதாகவும், நிறுவனத்தை நடத்துவது தொடர்ந்து சிக்கலாகி வரும் நிலையில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்திருப்பதாக அது அறிவித்திருந்தது.

இது தொடர்பாக மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தற்போதைய சூழ்நிலையில் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு விற்பனை எந்த அளவுக்கு செல்லும் எப்போது நிலைமை மேம்படும் என்று கணிப்பது கடினம். தொற்றால் ஏற்பட்ட பாதிப்பின் தொடக்க நிலையில் இருப்பதால் இதை அடிப்படையாக வைத்து எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிப்பது சாத்தியமில்லை.

ஆடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையைப் பொருத்த வரை கொரோன தளர்வுக்குப் பிறகு கடை திறந்து எட்டு வாரங்கள் ஆன நிலையில் மொத்த விற்பனை 29.9 சதவிகிதம் சரிந்துள்ளது. கடை விற்பனை 47.9 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆன்லைன் விற்பனை 39.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இதனால் ஸ்டோர்களின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்தை மேலும் ஒழுங்குபடுத்தும் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்கூட்டியே ஓய்வு வழங்குதல், வி.ஆர்.எஸ் போன்ற முறையில் ஆட்குறைப்பு செய்யப்படும். இந்த ஆட்குறைப்பு ஸ்டோர்களில் மட்டுமின்றி, தலைமை அலுவலகத்திலும் இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் நிறுவனத்துக்கு 1000க்கும் மேற்பட்ட ஸ்டோர்கள் உள்ளன. 78 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் அங்கு வேலை செய்து வருகின்றனர். தற்போது கூடுதலாக 7000 பேர் வேலை இழப்பதால் பலரும் அச்சத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk