கடைகளை மூடவும் நிகழ்ச்சிகளை ரத்து செய்யவும் இங்கிலாந்து கவுன்சில்களுக்கு அதிகாரம்!

lockdown, Coronavirus
(Image Courtesy: mirror.co.uk)

கொரோனா பாதிப்பைத் தவிர்க்க இங்கிலாந்து கவுன்சில்களுக்கு கடைகளை மூட, நிகழ்ச்சியை ரத்து செய்ய என பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது போலத் தெரிந்தாலும் தினமும் நிகழும் கொரோனா உயிரிழப்புகள் அச்சத்தை ஊட்டுகின்றன. அடுத்து வர உள்ள குளிர் காலத்தில் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அப்படி 2ம் கட்ட பரவல் ஏற்பட்டால் அதன் தாக்கம் முன்பைக் காட்டிலும் மிக மோசமானதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தீவிரத்தைக் கட்டுப்படுத்த, தவிர்க்க அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுகாதாரத் துறைக்கு 300 கோடி பவுண்ட் அளவுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் உள்ளூர் கவுன்சில்களுக்கு கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதிகாரம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், “உள்ளூர் நகர கவுன்சில்கள் தங்கள் பகுதிகளில் புதிய அதிகாரத்துடன் செயல்பட உள்ளன. குறிப்பிட்ட இடத்தை மூட, மக்கள் கூடும் வெளிப்புற இடங்களை மூட, நிகழ்ச்சிகளை ரத்து செய்வதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதன் மூலம் குறிப்பிட்ட பகுதியில் தொற்று பரவல் அதிகரிக்கிறது என்ற நிலையில் அவர்களால் உடனடியாக செயல்பட முடியும். அவர்களுக்கு உள்ளூர் குழுக்களைப் பற்றி நன்கு தெரியும் என்பதால் பிரச்னையை அவர்களால் அடையாளம் காணவும் எதிர்கொள்ளவும் முடியும். மத்திய அரசு எப்படி உள்ளாட்சி அளவில் திறம்படச் செயல்பட முடியும் என்பதைக் காட்டும் வகையில் புதிய வரைவு சட்டம் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும்” என்றார்.

இது குறித்து ரிவர்பூல் நகர மேயர் ஸ்டீவ் ரோத்தேராம் கூறுகையில், “தினசரி தொற்று ஏற்படுபவர்கள் எண்ணிக்கை, இடம் என கவுன்சில்களுக்கு மிக விவரமான தகவல் கிடைக்கின்றன. இதன் மூலம் குழுக்களுக்கு செய்தி அனுப்புவதை கவுன்சில்களால் முடியும். உதாரணத்துக்கு குறிப்பிட்ட பகுதியில் உள்ள இளைஞர்களைக் கூறலாம். கால்பந்தாட்டம் விளையாடும் இளைஞர்களைக் கால்பந்து விளையாடக் கூடாது அல்லது பாதுகாப்பு முகக் கவசம் அணிந்து விளையாடுங்கள் என்று அறிவுறுத்த முடியும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk