கேம்பிரிட்ஜ்ஷையரில் பயங்கர தீ விபத்து – இரண்டு குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்

தீ விபத்து, கேம்பிரிட்ஷையர்,
(Image: Terry Harris)

கேம்பிரிட்ஜ்ஷையரில் வீடு ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்து காரணமாக மூன்று மற்றும் ஏழு வயது குழந்தைகள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தாயார் சிகிச்சை பெற்று வருகிறார்.

கேம்பிரிட்ஜ்ஷையர் செயின்ட் நியோட்ஸ், ஜனஸ்பரி, பட்டர்கப் அவென்யூவில் வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

வீட்டின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ இரண்டாவது மாடி வரை கொழுந்து விட்டு எரிந்தது. ஜன்னல் வழியே வெளியே வந்த நெருப்பு மற்றும் புகை மூன்று மணி நேரங்களுக்கு மேல் நீடித்தது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கேம்பிரிட்ஜ்ஷையர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக, கேம்பிரிட்ஷையர் மற்றும் பெட்ஃபோர்ட்ஷையர் பகுதிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயைப் போராடி அணைத்தனர். மேலும் வீட்டில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில் மூன்று ஆண் குழந்தையும்  ஏழு வயது பெண் குழந்தையும் என இருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்த 35 வயதான குழந்தைகளின் தாயாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 46 வயதான தந்தை சிறிய காயங்களுடன் தப்பினார்.

அஞ்சலி செலுத்தி வரும் மக்கள். (Image: Cambridge News)

தீவிபத்து எதனால் ஏற்பட்டது என்று விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “எதனால் தீ விபத்து ஏற்பட்டது என்று தெரியவில்லை.

போலீசாரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிபுணர்களும் இணைந்து தீ விபத்துக்கான காரணம் பற்றி ஆராய்ந்து வருகின்றனர்” என்றனர்.

சம்பவம் குறித்து பக்கத்தில் வசித்து வரும் சார்லஸ் காப்பர் கூறுகையில், “தீ மளமளவெனப் பற்றி எரிந்தது. நானும் என் மனைவியும் எழுந்து பார்க்கும் போது தீயணைப்பு வீரர்கள் ஏராளமானவர்கள் வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

வீட்டின் மேல் பக்க ஜன்னல் வழியாக தீ வேகமாக வெளியேறியது. மூன்று – நான்கு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்” என்றார்.

உயிரிழந்த இரண்டு குழந்தைகளுக்காக அப்பகுதி மக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த பகுதியில் பலரும் மலர்க் கொத்துக்கள், பொம்மைகள், இரங்கல் குறிப்பு அட்டைகளை வைத்து தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

இதைப் படிச்சீங்களா: லண்டன்: மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கட்டாய கொரோனா சோதனை!

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter