லண்டன்: மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கட்டாய கொரோனா சோதனை!

Covid testing, kids, கொரோனா
(Image: dailymail.co.uk)

லண்டனில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மெட் ஹென்காக் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை செயலாளர் ஹென்காக் இன்று பேட்டி அளித்த போது, “கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க லண்டன், கென்ட் மற்றும் எசெக்ஸ் பகுதிகளில் மிக மோசமாக தொற்று உள்ள இடங்களில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இளைஞர்கள் மத்தியில் கொரோனா தொற்று அதிகரிப்பு கவலைக்குரியது. இது விரைவில் எளிதில் தொற்றும் வாய்ப்புள்ளவர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அனுபவத்தின் வாயிலாக நாங்கள் அறிந்து வைத்துள்ளோம்.

NHS coronavirus vaccine, கொரோனா
(Image: PA Wire)

எனவே மேல்நிலை மாணவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

பள்ளி மாணவர்கள் மத்தியில் கொரோனா பரவலைத் தடுத்து நிறுத்த நாம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. விரிவான தகவல் நாளை வெளியிடப்படும்.

வதந்தி…

லண்டன், கென்ட், எசெக்ஸின் பல பகுதிகளில் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து வருவது பற்றியும் ஏற்கனவே சில பகுதிகளில் பரவல் உச்ச அளவில் இருப்பதையும் அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

கட்டுப்பாடுகள், நடவடிக்கைகள் எடுக்க அரசு அடுத்த வாரம் வரை காத்திருக்காது. அந்த பகுதிக்கான விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.

லண்டனில் மூன்றாம் நிலை கட்டுப்பாடு கொண்டுவரப்படும் என்று கூறப்படுவது வெறும் வதந்திதான். அதை பெரிதாக்கிவிட வேண்டாம்” என்றார்.

அடுத்த வாரம் சனிக் கிழமை கொரோனா கட்டுப்பாடு அடுக்கு நிலை பற்றிய முதல் பரிசீலனை நடைபெற உள்ள நிலையில் மெட் ஹென்காக்கின் இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

லண்டன் மற்றும் எசெக்ஸ் தற்போது இரண்டாவது உயர் நிலை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. கென்ட் ஏற்கனவே மூன்றாம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இங்கிலாந்தில் கொரோனாத் தொற்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில் மெட் ஹென்காக்கின் இந்த பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter