விரும்பிய இடத்தில் திருமணம்… சட்ட ஆணையம் பரிந்துரை!

(Image: yourchurchwedding.org)

லண்டன், 3 செப்டம்பர் 2020: இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்சில் வீட்டுக்குள், வெளியே தங்கள் விருப்பும் இடம் என எங்கு வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளவதற்கான புதிய விதியை சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இங்கிலாந்து மற்றும் வேல்சில் திருமணம் என்றால் இப்படித்தான் நடைபெற வேண்டும் என சில விதிமுறைகள் உள்ளன.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடிப்படையில் திருமணம் செய்ய வேண்டும் என்றால் பதிவு செய்யப்பட்ட மத கட்டிடத்தில் திருமணம் செய்ய வேண்டும். அது மதம் தொடர்பான அமைச்சகத்தால் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.

மதம் சார்ந்ததாக இல்லாமல், ஒரே பாலினத் திருமணம் போன்றவையாக இருந்தால் பதிவு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும்.

சிவில் விழா என்றால், உள்ளூர் கவுன்சில் அல்லது பதிவுத் துறை அங்கீகரித்த இடமாக இருக்க வேண்டும், இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும்.

இந்த கடும் கட்டுப்பாடு காரணமாக கொரோனா ஊரடங்கு காலத்தில் பல திருமணங்கள் தள்ளிப்போடப்பட்டன, பல ரத்து செய்யப்பட்டன.

தற்போது வீட்டுக்குள், வீட்டு வாசலில், தோட்டத்தில், கடற்கரையில் என தம்பதிகள் எங்கு விரும்புகிறார்களோ அந்த இடத்தில் திருமணம் செய்துகொள்வதற்கான வழிகாட்டுதல்களை சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

மேலும், கொரோனா ஊரடங்கு போன்று ஒரு நிலை ஏற்பட்டால் சூம் இணையதள வீடியோ காட்சி மூலம் திருமணம் செய்துகொள்ள அனுமதிப்பது என்றும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

ஸ்காட்லாந்தில் திருமணம் எங்கு வேண்டுமானாலும் நடத்திக்கொள்ள அனுமதி உள்ள நிலையில் இங்கிலாந்து மற்றும் வேல்சிலும் அது போன்ற நிலை வருவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சட்ட ஆணையத்தின் குடும்ப சட்டம் ஆணையர் பேராசிரியர் நைக் ஹாப்கின்ஸ் கூறுகையில்,

“எங்கள் திட்டமானது தம்பதிகள் அவர்களுக்கு விருப்பமான திருமண இடத்தை தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தையும் அவர்கள் வாழ்வில் அது அர்த்தமுள்ள விழாவாக இருப்பதையும் உறுதி செய்யும்.

இவ்வாறு செய்வதன் மூலம் தற்கால சமூகத்திற்கு ஏற்ற வகையில் சட்டம் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்று நம்புகிறோம்” என்றார்.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளே உடனடியாக மாற்றம் கொண்டு வர காரணமாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டு கொரோனா காரணமாகத் திருமண நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு துறை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த புதிய சட்டம் திருமணம் நடைபெறுவதை எளிமைப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்ச் ஆஃப் இங்கிலாந்து செய்தித் தொடர்பாளர்,

“அர்த்தமுள்ள ஒரு இடத்தில் திருமணம் செய்துகொள்வது தம்பதியினருக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் இன்னும் முக்கியமானதாக இருக்கும் என்று எங்கள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter