நியாயமான சம்பளத்தை வழங்கு… என்.ஹெச்.எஸ் செவிலியர்கள் போராட்டம்!

ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்திய செவிலியர்கள். (Image: expressandstar.com)

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் நியாயமான ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்று நேஷனல் ஹெல்த் சர்வீசஸ் செவிலியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மாதம் என்.ஹெச்.எஸ் மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வை அரசு அறிவித்தது. ஆனால், செவிலியர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. அவர்களுடனான ஊதிய ஒப்பந்தம் முடிவடையும்போதே ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கொரோனா காலத்தில் சுகாதார ஊழியர்களுக்கு கைத்தட்டல் போன்ற தேவையில்லாத நடவடிக்கைகளுக்கு பதில் ஊதிய உயர்வு வழங்காததற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.

பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்த சென்ட்ரல் லண்டன் புனித தாமஸ் மருத்துவமனை கிரிடிகிள் கேர் செவிலியர் டேவ் கார் கூறுகையில், “கொரோனா காலத்தில் பணியாற்றியது, என்னுடைய மருத்துவ பணி வாழ்வில் நான் சந்திக்காத மிகக் கடினமான காலமாக இருந்தது. அப்படி இருந்தும் ஊதிய உயர்வு இல்லாதது கொந்தளிப்பை அளிக்கிறது. ஒன்பது லட்சம் அரசுப் பணியாளர்கள் ஊதிய உயர்வு பெறும் நிலையில் எங்களுக்கு ஊதிய உயர்வு இல்லை என்று கூறும்போது, அது கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது” என்றார்.

லண்டனில் நடந்த போராட்டத்தில், என்.ஹெச்.எஸ்-ல் நிலவும் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், எங்களுக்கு நியாயமானதை போரிஸ் ஜான்சன் வழங்க வேண்டும், அல்லது பதவியில் இருந்து இறங்க வேண்டும்” என்று கோஷம் எழுப்பினர்.

க்ளாஸ்கோ சிட்டியில் நடந்த போராட்டத்தில் உங்களை காப்பாற்றியது யார் போரிஸ்?, கோவிட் ஹீரோக்களுக்கு சம்பள உயர்வு ஸீரோ என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மூத்த செவிலியல் மெலனி கேல் கூறுகையில், “சம ஊதியத்துக்கு நாங்கள் தகுதியானவர்களாக இருக்கிறோம். நாங்கள் செய்யும் வேலைக்கு முறையான ஊதியம் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது” என்றார்.

இந்த போராட்டம் லிவர்பூல், பிர்மிங்ஹாம், எடின்பர்க் என யு.கே முழுவதும் நடந்தது.

கொரோனா இரண்டாம் அலை வரலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மருத்துவ பணியாளர்களின் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk