அதிகரிக்கும் தொற்று… எடின்பர்க்கில் ஊரடங்குக்கு எதிராக வெடித்த போராட்டம்!

Image: Google map

எடின்பர்க், 5 செப்டம்பர் 2020: ஸ்காட்லாந்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், எடின்பர்க்கில் கொரோனா ஊரடங்குக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பற்றி உலகமே பயப்படும் போது, கொரோனா வைரஸ் எல்லாம் பிரச்னையே இல்லை என்று இங்கிலாந்தில் ஏராளமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் லண்டன், பாரிஸ், பெர்லின் என்று பல இடங்களில் கொரோனா ஊரடங்குக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தினர்.

இந்த நிலையில் எடின்பர்க்கில் மிகப்பெரிய அளவில் ஊரடங்கு எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கொரோனா அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது, மக்களைக் கட்டுப்படுத்த கொரோனாவை அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்கள் என்று போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.

கொரோனா வைரஸ் பற்றி சந்தேக கொள்கை கொண்டவர்கள், தடுப்பூசிக்கு எதிரானவர்கள் மற்றும் மாஸ்க் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் என ஆயிரக்கணக்கானோர் எந்த சமூக இடைவெளியும் பின்பற்றாமல் எடின்பர்க் ஹோலிரூட் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்காட்லாந்தில் கடந்த வாரம் 507 ஆக இருந்த தொற்று, இந்த ஒரு வாரத்தில் மட்டும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் 994 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 141 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த போராட்டம் கவலை அளிக்கும் வகையில் இருந்தது.

இந்த போராட்டம் குறித்து ஸ்காட்லாந்தின் தேசிய மருத்துவ இயக்குநர் பேராசிரியர் ஜேசன் லீட்ச் கூறுகையில், “மிகவும் ஆழ்ந்த பொறுப்பற்றவர்களின் பொறுப்பற்ற செயல். உண்மையில் எனக்கு இது புரியவில்லை. இது பொறுப்பற்றத்தனமாகவே எனக்குத் தெரிகிறது. இந்த கொரோனாத் தொற்றை நாங்கள் உருவாக்கினோம் என்று கூறுகிறார்களா? 194 நாடுகள் இந்த பெருந்தொற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றன.

கடந்த ஆறு மாதமாக நாங்கள் எங்களுக்காக வாழவில்லை, நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் உயிரைக் கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் இது பொறுப்பற்ற செயலாகவே தெரிகிறது” என்றார்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள், “கொரோனா பற்றிய உண்மையான அறிவியல் உண்மைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மாஸ் அணிதல், தடுப்பூசி போன்றவை தேவையில்லாதது. இரண்டாவது முழு ஊரடங்கு கொண்டு வரவே கூடாது. ஊரடங்கு என்பது கொரோனா வைரஸை விடக் கொடியது” என்றனர்.

ஊரடங்கு கொடியதுதான்… அதைவிடக் கொடியது தொற்றுப் பரவல். உயிரைக் கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு மரியாதை கொடுப்பதாக இருந்தால் சில நாட்களுக்கு இது போன்ற கூட்டங்கள், கொண்டாட்டங்களைத் தவிர்ப்பது நல்லது. இவர்கள் இப்படிக் கூடுவதால் மருத்துவமனையில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் வேலைப்பளுதான் அதிகரிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

கேட்பார்களா?

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter