கொரோனா ஒழிப்பு பற்றி விரைவில் நல்ல செய்தி… பிரதமர் நம்பிக்கை!

பேட்டியின் போது போரிஸ் ஜான்சன். (Image: BBC)

லண்டன், அக்டோபர் 4, 2020: கொரோனா ஒழிப்பு தொடர்பாக சில வாரங்களில், மாதங்களில் நல்ல செய்தி வரலாம் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை கொரோனாத் தொற்று 10 ஆயிரத்தைக் கடந்த நிலையில், பிபிசி ஆன்ட்ரூ மார் ஷோவில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் வரை கொரோனா நிலை கடினமானதாக இருக்கும். அதன் பிறகும் கூட அது தொடரலாம்.

இந்த குளிர்காலம் நமக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். இந்த உண்மையை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மார்ச் மாதம் முதல் நிகழ்ந்து வரும் கொரோனா பிரச்னைகளுக்கு என்னுடைய அரசு முழு பொறுப்பேற்றுக் கொள்கிறது.

இந்தக் கால கட்டத்தில் உயிரைக் காப்பாற்றவும் பொருளாதாரத்தை நகர்த்துவதற்கும் இடையே சமநிலையைக் கண்டறிவது அவசியமானதாக உள்ளது.

தடுப்பூசி மற்றும் அது தொடர்பான சோதனைகளில் முன்னேற்றத்தைக் காணத் தொடங்கியுள்ளோம். அது நம்முடைய செயல்பாட்டில் மாற்றங்களை கொண்டுவர அனுமதிக்கும் என்று நம்புகிறோம்.

சில மாதங்களுக்கு முன்பு இல்லாத வேறுபட்ட சிகிச்சை தற்போது கிடைக்கின்றன. இது சமன்பாட்டை மாற்றியது. வசந்த காலத்தில் இன்னும் வித்தியாசமாக இருக்கும். நாம் வேறு வித்தியாசமான உலகில் இருப்போம்.

வெவ்வேறு கட்டுப்பாடுகள், விதிகள் காரணமாக மக்கள் என் மீது கோபத்துடன் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

இருப்பினும் தற்போதைய சூழலில் உள்ளூர் அளவிலான கட்டுப்பாடுகள் மிகச் சரியான நடைமுறையாக உள்ளது. இதன் வெற்றியைக் காண கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.

நான் சுதந்திரத்தை விரும்பும் பேர்வழி. இது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க நான் விரும்பவில்லை. ஆனால் கடைசி கட்டத்தில் இதை செய்தாக வேண்டியுள்ளது. மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டியுள்ளது. அது என்னுடைய முக்கிய முதன்மையான கடமையும் கூட.

தற்போதைய சூழலில் கொரோனா பாதிப்பை மிக விரைவாக முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அவசியமானதாக உள்ளது. அடுத்த சில வாரங்கள், மாதங்களில் தடுப்பூசி சோதனை தொடர்பான நல்ல செய்தி வரும் என்று நம்புகிறோம்.

அது அறிவியல் பூர்வமான சமன்பாட்டில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். வைரஸ் கிருமியை அழிக்கும் முயற்சிக்கு அந்த செயல்பாடு மிகவும் உதவியாக இருக்கும். கிறிஸ்துமசுக்கு முன்னதாக நல்லது நடக்கும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter