கொரோனா 2ம் அலையில் 85,000 பேர் உயிரிழக்கலாம்… வெளியான அறிக்கையால் அதிர்ச்சி

worst hit Corona, கொரோனா
(Image: Neil Hall/AP - AP)

லண்டன், 29 ஆகஸ்ட் 2020: இங்கிலாந்தில் குளிர் காலத்தில் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் கொரோனா பரவல் காரணமாக 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என்று அரசின் ரகசிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதை ஒப்புக்கொள்ளும் வகையில் சுகாதாரத் துறை செயலாளர் பேட்டி அளித்திருப்பது அதிர்ச்சிளை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் வரும் குளிர் காலத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை உச்சத்தை அடையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். மிகப்பெரிய அளவில் தொற்று, உயிரிழப்பு, பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதை எதிர்கொள்ள இங்கிலாந்து அரசு எல்லா வகையிலும் தன்னை தயார்படுத்தி வருகிறது.

சமூக இடைவெளி, முகக் கவசம், குவாரன்டைன் விதிகள் என அரசு கொண்டு வரும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கும் மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. இருப்பினும், மக்கள் நலனுக்காக இதை செய்தாக வேண்டியது கடமை என்று அரசு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் இரண்டாம் கட்டமாக கொரோனா பரவல் ஏற்பட்டால் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்க வாய்ப்புள்ளது என்று SAGE அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று செய்தி வெளியாகி உள்ளது. இது குறித்து சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக்கை ஊடகம் ஒன்று பேட்டி எடுத்தது.

அந்த பேட்டியில், “இங்கிலாந்தின் குளிர் காலத்தில் இரண்டாம் கட்ட கொரோனாத் தொற்று பரவலுக்கு வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க முடியும் என்றாலும் அது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. இந்த நிலையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது பல்வேறு புதிய சவால்களை ஏற்படுத்தும். உலகம் முழுக்க இரண்டாம் பரவலுக்கான வாய்ப்பு உள்ளது தெளிவாகத் தெரிகிறது.

கொரோனா இரண்டாம் கட்டம் என்பது மிகவும் தீவிரமான எச்சரிக்கை. இருப்பினும் தற்போது வரையில் அதிக கொரோனா பரிசோதனை, உள்ளூர் அளவில் ஊரடங்கு போன்ற செயல்பாடுகள் காரணமாக இங்கிலாந்து கொரோனா தொற்றைக் கட்டுக்குள் வைத்துள்ளது.

இருப்பினும் கொரோனாத் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும். அதிகப்படியான பரவலைத் தடுக்க உள்ளூர் அளவில் ஊரடங்கு அல்லது தேசிய அளவிலான ஊரடங்கை மீண்டும் அமல்படுத்த வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையைப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை” என்றார்.

85 ஆயிரம் பேர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது பற்றி நேரடியாக அவர் பதில் அளிக்கவில்லை. அதே நேரத்தில் குளிர் காலத்தில் தொற்று தீவிரமாக பரவவும், நிலைமை மோசம் அடைந்து தேசிய அளவில் ஊரடங்கு கொண்டு வரவும் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். எனவே, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கேளிக்கை, கொண்டாட்டம் எல்லாம் தேவைதான். ஆனால் நம்முடைய நடவடிக்கை கொரோனா பரவலுக்குக் காரணமாகிவிடக் கூடாது. சில மாதங்களுக்கு கட்டுப்பாட்டுன் இருந்தால் கொரோனா பரவல் முற்றிலும் இல்லை என்ற நிலை வந்துவிடும். அதன் பிறகு ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என்று இருக்கலாம். எந்த தடையும் இருக்கப் போவது இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மக்கள் கேட்பார்களா?

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk