ஃபிரான்சிஸ் புயல் பாதிப்பு… வெள்ளத்தில் சிக்கிய வீடுகள்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

(Image: skymetweather.com)

லண்டன், 25 ஆகஸ்ட் 2020: வழக்கத்துக்கு மாறான காலத்தில் ஏற்பட்ட ஃபிரான்சிஸ் புயல் பாதிப்பு காரணமாக கன மழை பொழிந்துள்ளது. இதனால், பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.

இங்கிலாந்தின் மேற்குப் பகுதி வேல்ஸில் ஃபிரான்சிஸ் புயல் காரணமாக கன மழை மற்றும் சூறைக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. மணிக்கு 70 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கூறப்பட்டு இரந்தது. இதன் படி கன மழை பொழிந்து வருகிறது. ரயில் பாதைகள், சாலைகள், குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கார்டிஃப் நகருக்கு வடக்கே உள்ள ரிவர் டாஃப்பில் இரண்டு பேர் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த புயல் காரணமாக இங்கிலாந்து முழுவதும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்காட்லாந்தில் 90 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவும் கன மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. தெற்கு வேல்ஸில் இரண்டு பேர் மாயமான நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ஒன்பது பொது மக்கள் மற்றும் இரண்டு நாயை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். நீத், விட்லேண்ட், டோனரிஃபைல் மற்றும் லெனல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் பல குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இந்த பகுதி சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

வடக்கு அயர்லாந்திலும் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகின்றன. சில இடங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

மழை வெள்ளம் காரணமாக சாலைகள் மூடப்பட்டுள்ளன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இங்கிலாந்து முழுக்க ரயில் பாதைகளில் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு அயர்லாந்து, தெற்கு ஸ்காட்லாந்து, வடக்கு இங்கிலாந்து, வடக்கு வேல்சின் சில பகுதிகளில் இதே வானிலை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 70 மையல் வேகத்தில் காற்று வீசும் என்பதால் பொது மக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேற்கு மில்லாண்ட்சின் சில பகுதிகள், பர்மிங்ஹாம் மற்றும் இங்கிலாந்தின் தென்பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk