வடக்கு யார்க்‌ஷேயரில் போதை மருந்துக்கு பலியான 15 வயது சிறுவன்!

உயிரிழந்த சிறுவன். (Image: North Yorkshire Police)

யார்க், செப்டம்பர் 28, 2020: வடக்கு யார்க்‌ஷேயரில் சட்ட விரோதமாக போதை மருந்து எடுத்துக் கொண்ட 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யார்க்கின் நியூ ஈர்ஸ்விக் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஷ் ரீசன். இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4 மணி அளவில் ஹாஸ்பிடல் ஃபீல்ட்ஸ் சாலையில் உள்ள ஒரு சந்தில் பேச்சு மூச்சின்றி இருப்பதை பொது மக்களில் சிலர் பார்த்துள்ளனர்.

உடனடியாக போலீசார் மற்றும் மருத்துவ உதவிக் குழுவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து ஆம்புலன்ஸ் மூலம் ஜோஷ் ரீசனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், அந்த சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், போதை மருந்து பயன்படுத்தியதால் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ஆறு பேரை கைது செய்தனர்.

இவர்களில் 14 வயது சிறுவர்கள், 15 வயது சிறுமி, 16 வயது சிறுவன், 33 வயது பெண்மணி, 37 வயது ஆண் ஆகியோர் அடக்கம்.

கைது செய்யப்பட்ட 14 வயதான இரண்டு சிறுவர்கள் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மற்ற அனைவரும் வடக்கு யார்க் ஷேயர் போலீசின் விசாரணையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஜிம் கிளாஸ் கூறுகையில், “இந்த சிறுவன் மட்டுமின்றி, மேலும் பலரும் இணைந்து சட்ட விரோதமான போதைப் பொருள் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. உண்மையில் இது மிகவும் மோசமான சம்பவம்.

சிறுவனின் குடும்பத்தினருக்கு உளவியல் ரீதியான ஆறுதலைச் சிறப்பு நிபுணர்கள் குழு வழங்கி வருகிறது.

இந்த சம்பவத்தை நேரில் யாராவது பார்த்தால் அது பற்றி போலீசாரிடம் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

போதை மருந்துக்கு அடிமையாகி 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்கள் மத்தியில் போதை மருந்துகளை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter