மெர்சிடிஸ் கார் ஏற்றி இளம் பெண் கொல்லப்பட்ட வழக்கு… பாரிஸ்டரின் மகனுக்கு 7 ஆண்டு சிறை!

கார் மோதியதால் உயிரிழந்த அனிஷா விடல் கார்னர் (Picture: Metropolitan Police)

பிரிக்ஸ்டனில் இளம் பெண் ஒருவர் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில், மெர்சிடிஸ் காரில் அதிவேகத்தில் வந்த பாரிஸ்டர் ஒருவரின் மகனுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தெற்கு லண்டன் பிரிக்ஸ்டன் ஹில்லில் சாலையைக் கடக்க முயன்ற 20 வயதே ஆன அனிஷா விடல்- கார்னர் மீது மெர்சிடிஸ் கார் ஒன்று பயங்கரமாக மோதியது. அதிவேகத்தில் கார் வந்து மோதியதால் அந்த இளம் பெண் காற்றில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தியே அவளுடைய காதலன் முன்னிலையில் உயிரிழந்தாள்.

காரை ஒட்டிய குயின்சி அனியம் (27) சிவப்பு விளக்கு எரிவதை கவனிக்காமல், மணிக்கு 60 மைலுக்கும் அதிகமான வேகத்தில் வந்து மோதியுள்ளார். மேலும் சேதமடைந்த காரை அங்கேயே நிறுத்தாமல் சில மைல் தொலைவில் விட்டுவிட்டு தப்பிச் சென்றார். காரை ஒட்டிய அனியத்தை போலீசார் தேடிவந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து அவராக வந்து போலீசில் சரண் அடைந்தார்.

அதிவேகத்தில் காரை ஓட்டியது, போக்குவரத்து விளக்குகளை மதிக்காதது, விபத்து ஏற்பட்ட உடன் வாகனத்தை நிறுத்தாமல் சில மைல் தூரத்துக்கு சென்று காரை நிறுத்திவிட்டு சென்றது என அனியம் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அனியம் ஏற்றுக்கொண்டார். இதன் அடிப்படையில் அவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து  அனிஷா விடலின் ஆண் நண்பர் ரோரி சால்டர்ஸ் இது குறித்து கூறுகையில், “கண் முன்பாக என்னுடைய காதலில் விபத்துக்குள்ளாகி தூக்கி வீசப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சியையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியது. அனிஷா என் வாழ்க்கையின் ஒளியாக இருந்தார்.

அழகான, புத்திசாலித்தனமான, இரக்கமுள்ள அனைத்துக்கும் மேலாக நகைச்சுவை உணர்வு மிக்கவராக, எப்போதும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நினைத்த பெண்ணாக இருந்தார். என் கண் முன்பாக அவள் இறந்து கிடந்ததைப் பார்த்தபோது என் மூளையே எரிந்துவிட்டது போல இருந்தது” என்றார்.

அனியம் வாகனம் ஓட்டி பிரச்னையில் சிக்குவது இது முதன்முறையில்லை. 2016ம் ஆண்டில் வாகனத்தில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். 14 மாதங்கள் வாகனம் ஓட்ட தடை செய்யப்பட்டவர். அவர் மீது பதிவு செய்யப்பட்ட 22 வழக்குகளில் 10ல் தண்டனைத் தீர்ப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk