9வது மாடியிலிருந்து விழுந்த குழந்தை… கிழக்கு லண்டனில் கொடூரம்!

குழந்தை தவறி விழுந்த குடியிருப்பு. (Image: Google Map)

கிழக்கு லண்டனின் ஷோரெடிச்சில் 9வது மாடியில் இருந்து இரண்டு வயதுக் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. வீடுகளின் ஜன்னல்கள் பாதுகாப்பானதாக அமைக்கப்படாததும், குழந்தைகள் எளிதில் திறக்கும் வகையில் இருப்பதாலும் தொடர்ந்து குழந்தைகள் மாடியில் இருந்து தவறி விழுவது வாடிக்கையாக உள்ளது.

கிழக்கு லண்டன் ஷோர்எடிச்சில் நேற்று மாலை நான்கு மணி அளவில் 9வது மாடியில் இருந்து இரண்டு வயது குழந்தை தவறி விழுந்தது. திடீர் அலறல் சத்தம் கேட்கவே அப்பகுதியில் உள்ளவர்கள் என்ன நடந்தது என்று ஓடி வந்து பார்த்தபோது, இரண்டு வயது குழந்தை தரையில் பேச்சு மூச்சின்றி இருந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவப் பணியாளர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த குடியிருப்பைச் சேர்ந்த இசபெல்லா பீட்டர் கூறுகையில், “சத்தம் கேட்டு ஓடி வந்தேன். அங்கு சிறுவனின் தந்தை சம்பவ இடத்தில் நிற்பதைத்தான் முதலில் பார்த்தேன். வெறும் ஷார்ட்ஸில் தலையில் கை வைத்தபடி இல்லை இல்லை என்று கத்தி அழுது கொண்டிருந்தார். அதன் பிறகுதான் தரையில் பார்த்தபோது குழந்தை இருந்தது. இப்படி ஒரு சம்பவத்தைப் பார்ப்பேன் என்று நினைத்தது கூட இல்லை. அந்த காட்சி எப்போதும் என் மூளைக்குள்ளேயே இருக்கும். அந்த குடும்பம் எப்படி கஷ்டப்படும் என்பதை நினைக்கும் போதே வருத்தமாக இருக்கிறது” என்றார்.

இங்கிலாந்தில் மாடி வீடுகளில் இருந்து குழந்தை தவறி விழுவது இந்த ஆண்டில் இது ஏழாவது முறையாகும். லண்டனில் இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பிறகும் பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்த குடியிருப்பு ஹாக்னி கவுன்சிலுக்கு சொந்தமானதாகும். அதன் நிர்வாகத்தையும் ஹாக்னி கவுன்சில்தான் பார்த்துக் கொள்கிறது. இந்த குடியிருப்பின் ஜன்னல் கண்ணாடி தொடர்பாக கவுன்சிலில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இனியாவது இப்படி பாதுகாப்பற்ற கண்ணாடியை மாற்ற அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook: https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter: https://twitter.com/tamilmicsetuk