இங்கிலாந்து வந்த இளம்பெண்ணை கடத்தில் பாலியல் தொழிலில் தள்ளிய சகோதரர்களுக்கு சிறை தண்டனை! – நீதிமன்றம் தீர்ப்பு

sexual harrassment

ருமானியாவில் இருந்து இங்கிலாந்து வந்து பெண்ணை கடத்தி அடைத்துவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர சகோதரர்களுக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ஆறுதலைத் தந்துள்ளது.

ருமானியாவில் இருந்து லண்டனுக்கு கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி 20 வயது இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள தொழில் நிறுவனத்தில் வேலை செய்யப் போகிறோம் என்ற கனவுகளுடன் லூடன் விமானநிலையம் வந்து இறங்கிய அவருக்கு லண்டனில் நிகழ்ந்தது எல்லாம் கொடுமையின் உச்சம்.

விமான நிலையத்திலிருந்து அவரை பிளம்ஸ்டெட்டில் உள்ள ஒரு வீட்டுக்கு இல்கிக் டுமிட்ரு (19), அயோன் டுமிட்ரு (24) என்ற சகோதரர்கள் அழைத்துச் சென்றனர். அந்த பெண்ணிடமிருந்து இங்கிலாந்தில் தங்கியிருந்து வேலை பார்ப்பதற்கான உரிமம் பறிக்கப்பட்டது. ஏற்கனவே அங்கு தங்கியிருந்த இரண்டு ருமானியப் பெண்ணுடன் அவர் தங்க வைக்கப்பட்டார்.

மாலையில் வேலைக்கு செல்லலாம் என்று கூறிய இளைஞர்கள், கவர்ச்சியாக ஆடை அணியும்படி கூறியுள்ளனர். அவளிடம் ஒரு பை கொடுக்கப்பட்டது. அதில் காண்டம் மற்றும் வைப்ஸ் இருந்தது. சாலையில் வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பதால் பாதுகாப்புக்காக என்று விளக்கம் கொடுத்துள்ளனர். நான் இதுபோன்று வேலை செய்தது இல்லை. நான் அதற்கு தயாராக இல்லை என்று அந்த பெண் கூறியிருக்கிறார். ஆனால், கட்டாயப்படுத்தி அவளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். பாலியல் தொழிலில் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் கொடூர சகோதரர்கள் பறித்துச் சென்றனர்.

ஒரு முறை கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபட்ட போது, ஆணுறை கிழிந்து  அவள் கர்ப்பமாகியுள்ளாள். ஆனாலும் அந்த சகோதரர்கள் விடவில்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த அந்த கொடூர சகோதரர்கள் கர்ப்பமான நிலையிலும் பாலியல் தொழில் செய்ய நிர்ப்பந்தித்துள்ளனர். ஒரு நாளைக்கு அவள் 10 முதல் 15 வாடிக்கையாளர்களை எதிர்கொண்டு 1000 பவுண்ட் வரை சம்பாதித்துக் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர்.

அது மட்டுமின்றி அந்த பெண் தொடர்ந்து அடித்து சித்ரவதை செய்யப்பட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வயிற்றில் உள்ள குழந்தையின் அசைவு உணர முடியாத நிலையில் குழந்தை இறந்திருக்கும் என்று பயந்திருக்கிறார். அப்போது கூட அவளை பாலியல் தொழில் செய்ய வற்புறுத்தியுள்ளனர். அப்போது பாலியல் தேவைக்காக வந்த ஒருவர் இரக்கப்பட்டு தன்னுடைய செல்போனை கொடுத்து உதவி கேட்கச் செய்துள்ளார். அந்த பெண் ருமானியாவில் உள்ள தன்னுடைய பெற்றோரைத் தொடர்புகொண்டு நடந்ததை எல்லாம் கூறியிருக்கிறார். என்ன செய்வது என்று தெரியாமல் குடும்பத்தினர் திகைத்துப் போய் இருந்தனர்.

மீண்டும் ஒரு வாரம் கழித்து செல்போன் கொடுத்து பேசச் சொன்ன நபர் வந்து, மீண்டும் சிறிய போனைக் கொடுத்துச் சென்றார். ரகசியமான முறையில் குடும்பத்தைத் தொடர்புகொண்டு தான் இருக்கும் இடம் உள்ளிட்ட விவரங்களை அவர் கூறவே, 2019 டிசம்பர் 18ம் தேதி அந்த பெண்ணை மெட்ரோபாலிடன் போலீசார் மீட்டனர்.

ருமானியாவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் லண்டன் வந்து அந்த இளம் பெண்ணை மீட்க மெட்ரோபாலிடன் போலீசாருக்கு உதவியாக இருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சகோதரர்களும் கைது செய்யப்பட்டனர். சொந்த ஊர் திரும்பிய அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

கைது செய்யப்பட்ட டுமிட்ரு சகோதரர்கள் மீது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது. நவீன அடிமைத்தனத்தை மேற்கொண்டது என்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதாக வூல்விச் நீதிமன்றம் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இன்று அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது. இல்கிக் டுமிட்ருவுக்கு 15 ஆண்டுகள் மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அயோன் டுமிட்ருவுக்கு பாலியல் சுரண்டலுக்காக பெண்ணை அடிப்மைப்படுத்தி வைத்திருந்தது, இங்கிலாந்துக்குள் கடத்தலில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றத்துக்காக 16 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk