பாதுகாப்பு நாடுகள் பட்டியலில் இருந்து போர்ச்சுக்கல் நீக்கப்படுகிறது?

Portugal, லிஸ்பன்
லிஸ்பன் அருகே பொழுதை கழிக்கும் சுற்றுலா பயணிகள். (Image: news.sky.com)

லண்டன், 1 செப். 2020: போர்ச்சுக்கல் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பாதுகாப்பான நாடு பட்டியலில் இருந்து போர்ச்சுக்கல் நீக்கப்படும் என்று தெரிகிறது.

இதனால் அங்கு சுற்றுலா சென்றுள்ள ஏராளமான இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வருபவர்கள் 14 நாள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று அரசு விதிகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை மாதம் தொற்று குறைந்த நிலையில் பல நாடுகள் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

இதற்குள்ளாக கோடைக்காலம் வரவே பலரும் உற்சாகமாக ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா சென்றனர்.

அதன் பிறகு ஜூலை இறுதியில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாத் தொற்று ஏற்படவே ஸ்பெயின் தொடங்கி பிரான்ஸ் வரை பல நாடுகளும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வந்துள்ளன.

தற்போது பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் போர்ச்சுக்கல் உள்ளிட்ட நாடுகள் உள்ளன. அதே நேரத்தில் போர்ச்சுக்கல்லிலும் கொரோனாத் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தற்போது அங்கு ஒரு லட்சம் பேருக்கு 20க்கும் மேற்பட்டோருக்கு தொற்று என்ற நிலை உள்ளது. இவ்வளவு அதிகமான தொற்று இருந்தால் அந்த நாட்டை பாதுகாப்பான நாடு பட்டியலில் இருந்து நீக்குவது இங்கிலாந்தின் வழக்கம்.

எனவே, போர்ச்சுக்கல்லும் நீக்கப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பான இறுதி முடிவு வியாழக்கிழமை எடுக்கப்படும் என்று தெரிகிறது. வாய்ப்பு அதிகம் உள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

அரசின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல், சுய தனிமைப்படுத்தல் தொடர்பான விதியில் மாற்றம் வேண்டும் என்று சுற்றுலா மற்றும் பயண ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு நாட்டுக்கும் விதியை அமல்படுத்தாமல், குறிப்பிட்ட பகுதிக்கு சென்று வந்தவர்களுக்கு மட்டும் என்று விதி இருந்தால் மக்கள் நிம்மதியடைவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

போர்ச்சுக்கல்லும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று செய்தி வெளியாகவே, அங்கு சுற்றுலா சென்ற இங்கிலாந்து மக்கள் பலரும் புதிய விதி அமலுக்கு வருவதற்கு முன்பு வியாழன், வெள்ளிக் கிழமைகளில் இங்கிலாந்து திரும்புதவற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஃபாரோவில் இருந்து அல்கார்வேக்கு சேவை வழங்கும் ஈஸி ஜெட் விமானத்தின் அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துவிட்டது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஃபாரோவில் இருந்து ஹீத்ருவுக்கு வரும் டிக்கெட்டை வியாழக்கிழமை தேதிக்கு 554 பவுண்டுக்கு விற்றுள்ளது. இதுவே வழக்கமாக 139 பவுண்டுக்கு விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் போர்ச்சுக்கள் சேர்க்கப்படவே, ஆயிரக்கணக்கான இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் போர்ச்சுக்கல் சென்றனர். ஒரு சில நாட்களிலேயே நிலைமை தலைகீழாக மாறியிருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter