2வது நாளாக 7000ஐ தாண்டிய கொரோனா!

மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக நடக்கும் பெண்கள். (Image: Julian Hamilton/Daily Mirror)

லண்டன், செப்டம்பர் 30, 2020: இங்கிலாந்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 7000ஐ தாண்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் காலை 9 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 7108 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகி உள்ளது.

நேற்று காலை 9 மணி அறிக்கை படி 7143 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது.

தொடர்ந்து 2வது நாளாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை ஏழாயிரத்தைத் தாண்டியிருப்பது நாடு அபாயமான நிலையில் இருப்பதை உறுதி செய்வதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் 71 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இங்கிலாந்தின் மொத்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 453,264 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்து 143 ஆக அதிகரித்துள்ளது.

ஜூலையில் கொரோனா குறைந்தது. அதன் பிறகு கட்டுப்பாடுகள் தளர்வு வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து தொற்று அதிகரிக்கத் தொடங்கியது.

தற்போது நாடு முழுக்க பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய்த் தொற்று மட்டுமின்றி, கொரோனா காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

திங்கட்கிழமை நிலவரப்படி மருத்துவமனைகளில் 2,252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 312 பேர் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே வேல்சில் உள்ள ரோண்ட்டா சைனான் டாப்பில் உள்ள ராயல் கிளாமோர்கன் மருத்துவமனையில் ஒரு வாரத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்ததைத் தொடர்ந்து உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த மருத்துவமனையில் கொரோனாவுக்கு எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் உயிருக்குப் போராடி வருவதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து வடக்கு வேல்சில் டைன்பிஷைர், பிளின்ட்ஷையர், கான்வி மற்றும் ரெக்ஸ்ஹாம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள் இன்று மாலை 6 மணியில் இருந்து அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter