இங்கிலாந்தின் கால்வாசி மக்கள் மீது சுமத்தப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள்!

UK, Covid, Mask
(Image: news.sky.com)

லண்டன், செப்டம்பர் 26, 2020: இங்கிலாந்தில் இன்று (சனிக்கிழமை) முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வர உள்ள நிலையில்

மொத்த மக்கள் தொகையில் கால்வாசி பேர் மீது பல்வேறு ஊரடங்கு விதிமுறைகள் சுமத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தின் லீட்ஸ், விகன், ஸ்டாக் ஃபோர்ட் மற்றும் பிளாக்பூல் பகுதியில் வேறு ஒருவர் வீடுகளுக்கு சென்று சந்திப்பது,

அவர்கள் வீட்டுக்கு வெளியே தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சந்திப்பை நிகழ்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

வேல்சில் லானெல்ஸ் பகுதிகளில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகிறது.

அதன் பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் கார்டிஃப் மற்றும் ஸ்வான்சீ பகுதியில் விதிமுறைகள் அமலுக்கு ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற புதன் கிழமை முதல் முழு ஸ்காட்லாந்திலும் மற்றவர்கள் குடும்பத்துடனான சந்திப்புக்குத் தடை கொண்டு வரப்படுகிறது.

இப்படி கொரோனா பரவல் விகிதம் அதிகரித்து வருவதால் நாட்டின் பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே இங்கிலாந்தில் ஆறு பேர் விதி, பப், உணவகங்கள் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் அமலில் உள்ளன.

இப்படி கட்டுப்பாடுகளுக்கு மேல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்தில் கால் சதவிகித மக்கள் அதாவது, 1.7 கோடி பேர் ஏதாவது ஒரு ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா அச்சம் ஒரு புறம் இருந்தாலும், இது போன்ற கட்டுப்பாடுகள் மக்களை எரிச்சல் அடைய செய்துள்ளது. பலரும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் இது குறித்துக் கூறுகையில், “இந்த கூடுதல் நடவடிக்கை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் சுமை மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், கொரோனா நோய்த் தொற்றை விரைவாக குறைக்க உதவும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில், லண்டன் மாநகரம் கூட கொரோனா கண்காணிப்பின் கீழ் இணையும் அளவுக்கு பிரச்னை அதிகரித்துள்ள நிலையில் மக்கள் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இப்போது எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு எதிராக செயல்பட்டால் முழு ஊரடங்கை சந்தித்தே தீர வேண்டிய நிலை வரலாம்… அது இப்போது இருக்கும் கொஞ்சநஞ்ச சுதந்திரத்தையும் மொத்தமாக பறித்துச் சென்றுவிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter